கோவை, அவிநாசி சாலையில் 1,791 கோடி ரூபாயில் 10.1 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக நேற்று இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கோவைக்கு வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் நிகழ்ச்சியாக கொடிசியாவில் நடைபெற உள்ள புத்தொழில் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இரண்டாவது நிகழ்ச்சியாக கோவை ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட அவினாசி மேம்பாலத்தை திறந்து வைத்து பாலத்தில் பயணிக்க உள்ளார். இந்த பாலத்திற்கு ஒன்றிய அரசு நிதி கிடையாது, நிதி முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இந்த பாலத்தை கட்டி இருப்பதாகவும், இதை பாலம் திறக்கும் போது முதல்வர் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவினாசி பாலம் முழுக்க மாநில அரசின் நிதியில் கட்டப்பட்டது என அமைச்சர் எ.வ.வேலு தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.