அரசு பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை ஹோட்டல்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதை மீறி அலட்சியமாக, விருப்பமான ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள்- நடத்துநர்கள், நள்ளிரவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் வசமாக சிக்கினர். Govt Buses SS Sivasankar
கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கரூர் வழியாக அரியலூருக்கு சென்று கொண்டிருந்தார் அமைச்சர் சிவசங்கர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்க சாவடி அருகே அரசு பேருந்துகள், சாலையோர ஹோட்டல்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
அரசு பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுத்தாமல் தங்கள் விருப்பத்துக்குரிய ஹோட்டல்களில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள்- நடத்துநர்கள் நிறுத்தியிருப்பதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் காரை விட்டு இறங்கினார்.
பின்னர் ஹோட்டலுக்குள் சாப்பிட சென்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வரும் வரை அரசு பேருந்துகள் முன்பாக சாதாரண பயணியைப் போல காத்திருந்தார் அமைச்சர் சிவசங்கர்.
அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அங்கு வந்தவுடன், ” ஏன் பேருந்தை இங்க நிறுத்தி இருக்கிறீர்கள்?” என்று அமைச்சர் சிவசங்கர் கேட்டார். இதற்கு “அரசு டெண்டர் விடுத்த ஹோட்டல்களில் டீ உள்ளிட்டவை சூடாக இல்லை, அதனால் தான் இங்கு நிறுத்தி டீ குடிச்சோம்” என அலட்சியமாக பதில் தந்தனர்.

“இப்படி உங்கள் விருப்பத்திற்கு பஸ்ஸை நிறுத்தினால் அரசு பதில் சொல்லுமா அல்லது நீங்கள் பதில் சொல்வீர்களா” என்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி கேட்டார். அத்துடன் “நீங்கள் செய்யும் தவறுக்கு அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று சீரியசாக பேச ஓட்டுநர் ஒருவர் ரொம்பவும் அலட்சியமாக பதிலளித்தார்.
இதனால் கடுப்பாகிப் போன அமைச்சர் சிவசங்கர், ” நான் யார் தெரியுமா? என கேட்க, ஓட்டுநரோ “யார் என்று தெரியாது” என பதில் சொன்னார். உடனே :”நான் தான் உங்க போக்குவரத்துத் துறை அமைச்சர்” என்று சிவசங்கர் கூற ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அப்படியே ஆடிப் போனார்கள். பின்னர், இதுபோன்ற தவறுகள் நடைபெறக் கூடாது என எச்சரித்துவிட்டு அமைச்சர் சிவசங்கர் அங்கிருந்து கிளம்பினார்.