இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பல்கள் சம்பந்தப்பட்ட அடுத்தடுத்த சம்பவங்கள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்றங்களை இந்தியாவின் கடல் எல்லைகளுக்கும் நீட்டித்துள்ளன. கடந்த மார்ச் முதல் வாரத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பு மற்றும் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றிருந்த ஈரானின் மூன்று போர்க்கப்பல்களே இந்த நிகழ்வுகளின் மையமாகியுள்ளன.

அமெரிக்கத் தாக்குதலில் மூழ்கிய ‘ஐரிஸ் தேனா’
மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, ஈரானின் ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற போர்க்கப்பல் இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. மார்ச் 4, அன்று நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 80 முதல் 100க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
சர்வதேச சட்டங்களை மீறிய போர்க்குற்றம் என ஈரான் இந்தத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையில் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தியாவின் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது, இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்கா-ஈரான் பதற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஐரிஸ் லாவன்’ கொச்சியில் தஞ்சம்
2-வது முக்கிய நிகழ்வாக, ஈரானின் ‘ஐரிஸ் லாவன்’ (IRIS Lavan) என்ற மற்றொரு போர்க்கப்பல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புக அனுமதி கோரியது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியாவின் அணுகுமுறை மனிதாபிமான அடிப்படையில் அமைந்தது” என்றார்.
மார்ச் 4 ஆம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ‘ஐரிஸ் லாவன்’ கப்பலில் இருந்த 183 மாலுமிகளுக்கும் கேரளாவின் கொச்சியில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
‘ஐரிஸ் பூஷெர்’ – இலங்கையின் உதவி
இதேபோல, MILAN 2026 பயிற்சியில் பங்கேற்றிருந்த மூன்றாவது ஈரானிய கப்பலான ‘ஐரிஸ் பூஷெர்’ (IRIS Bushehr) இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கையிடம் உதவி கோரியது. இலங்கை அரசு உடனடியாக அந்தக் கப்பலை மீட்டு, அதிலிருந்த 208 பேரையும் திருகோணமலை துறைமுகத்தில் தங்க வைத்துள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படை வீரர்களை அந்நாட்டிடம் திரும்ப ஒப்படைக்கக் கூடாது என அமெரிக்கா, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மையம் கொண்டிருந்த யுத்தச் சூறாவளி, இந்தியா- இலங்கையையின் வாசல் கதவுகளை தட்டிக் கொண்டு நிற்கிறது.
