கல்லூரி விடுதியில் (Dorm Room) நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே காலத்தைக் கழிக்கும் மாணவர்களுக்கு மத்தியில், 19 வயதில் பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வைத்துத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடங்கியவர் தான் மைக்கேல் டெல் (Michael Dell).
1984-ல் வெறும் 1,000 டாலர் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.85,000) முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘டெல்’ (Dell) நிறுவனம், இன்று சுமார் 90 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கும் மைக்கேல் டெல்லின் சொத்து மதிப்பு சுமார் 147 பில்லியன் டாலர்கள்.
இந்த இமாலய வெற்றியை அடைய அவர் பின்பற்றிய 6 முக்கிய விதிகள் (Rules) என்னென்ன? சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட அந்த ரகசியங்கள் இதோ:
1. டீம் ப்ளேயராக இருங்கள் (Be a Team Player): வெற்றி என்பது தனிநபர் சாதனை அல்ல. அணியாகச் செயல்படுவதுதான் வெற்றியைத் தரும். “கோபம் கொள்வது நேரத்தை வீணடிக்கும் செயல். பணியிடத்தில் சக ஊழியர்களை மரியாதையுடனும், நேர்மையுடனும் நடத்த வேண்டும். தாழ்மையுடன் இருப்பது அவசியம்,” என்கிறார் டெல்.
2. எப்போதும் கற்றுக்கொள்ளுங்கள் (Be Curious): “அறையில் இருக்கும் நபர்களிலேயே நீங்கள்தான் புத்திசாலி என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்களை விடத் திறமையானவர்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் உங்களைச் சவாலுக்கு அழைப்பவர்களுடன் எப்போதும் இருங்கள். வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதில் ஆர்வமாக (Curiosity) இருந்தால்தான் வேகமாக மாறும் உலகில் ஜெயிக்க முடியும்.”
3. நம்பிக்கை முக்கியம் (Be Trustworthy): பிசினஸில் நாணயம் மற்றும் நம்பிக்கைதான் அஸ்திவாரம். “நான் ஒரு பொருளைத் தருவதாகச் சொல்லிவிட்டுத் தரவில்லை என்றால், அல்லது தரம் குறைந்த பொருளைக் கொடுத்தால், யாரும் மீண்டும் என்னிடம் வரமாட்டார்கள். சந்தை என்பது நீண்ட கால நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.”
4. தோல்வியே பாடம் (Resilience): “வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். தோல்விகளும், சறுக்கல்களுமே உங்களை வலிமையாக்கும். அடி வாங்கினாலும் மீண்டும் எழுந்து நின்று போராடும் குணம் (Grit) வேண்டும். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைப்பதே மகிழ்ச்சிக்கான வழி.”
5. ரிஸ்க் எடுங்க பாஸ்! “நல்ல நெருக்கடியை (Crisis) வீணடிக்காதீர்கள். அதுதான் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ரிஸ்க் எடுப்பதற்கும், தவறுகள் செய்வதற்கும் பயப்படக்கூடாது. அதுதான் உங்களை அடுத்த கட்டத்திற்குத் திருப்புமுனை.”
6. மகிழ்ச்சி ஓகே… திருப்தி கூடாது! (Be pleased, but never satisfied): ஜப்பானிய மொழியில் ‘கைஸன்’ (Kaizen) என்று ஒரு முறை உண்டு. அதாவது ‘முடிவில்லாப் பந்தயம்’. “ஒரு சாதனையை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள், ஆனால் திருப்தி அடைந்து தேங்கிவிடாதீர்கள். அடுத்த இலக்கு என்ன என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.”
மெகா நன்கொடை: வெற்றிகரமான பிசினஸ்மேனாக மட்டுமல்லாமல், சிறந்த வள்ளலாகவும் திகழ்கிறார் டெல். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலீட்டுக் கணக்கு தொடங்கும் ‘இன்வெஸ்ட் அமெரிக்கா’ (Invest America) திட்டத்திற்காக, மைக்கேல் டெல்லும் அவரது மனைவி சூசனும் இணைந்து சுமார் 6.25 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் பல்லாயிரம் கோடிகள்) நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
