ED… எப்.ஐ.ஆர்… உச்ச நீதிமன்றம் சென்ற நேரு தரப்பு!

Published On:

| By Kavi

அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு,  பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை முன்று கடிதங்களை அனுப்பியது. அதில் இந்த முறைகேடுகள் தொடர்பாக  அமைச்சர் கே.என்.நேரு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த இரு மனுக்களையும் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும அருள்முருகன் அமர்வு விசாரித்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், அமலாக்கத் துறையின் கடிதத்தின் படி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை சார்பில், ஆரம்பக் கட்ட விசாரணை தேவையில்லை, நாங்கள் அளித்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்று வாதிட்டது. 

ADVERTISEMENT

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 20) உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, அமலாக்க துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையே விசாரிக்கட்டும் என்று கூறியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை கேட்டு அமைச்சர் நேரு தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share