தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 25) ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (செப்டம்பர் 26)ல் நீலகிரி, கோவை, தேனி தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் செப்டம்பர் 27ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பிற மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.