வரும் நவம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கேரளாவிற்கு வந்து விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் மாநிலங்களுள் கேரளாவும் ஒன்று. அர்ஜெண்டினா அணி 2022ஆம் ஆண்டு பிஃபா உலகக்கோப்பையை வென்றது முதல் அந்த அணியின் கேப்டனும், ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸியை கேரளா அழைத்து வர அம்மாநில அரசு போராடி வருகிறது.
இந்த நிலையில், உலக சாம்பியனான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தாண்டு நவம்பர் 10 முதல் 18 வரையிலான இடைப்பட்ட ஒருநாளில் கொச்சியில் நட்புப் போட்டியில் விளையாடும் என கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துர்ரஹ்மான் இன்று உறுதி செய்தார்.
தொடர்ந்து, இதனை அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில் உறுதி செய்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தி கேரளா கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜென்டினா அணி கேரளா வருவது உறுதியான நிலையில், அதனை எதிர்த்து விளையாட எந்த அணியை அழைக்கலாம் என்பது குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவிற்கு அர்ஜென்டினா அணி வருகை தருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2011 இல் கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் வெனிசுலாவை எதிர்கொண்டது.
அந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.