கடந்த 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கருணை கொலை செய்ய உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல்முறையாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் ராணா(32). இவர் 2013ஆம் ஆண்டு சண்டிகரில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தங்கியிருந்த விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதில் ஹரிஷ் ராணாவுக்கு தலையில் அடிபட்டு மூளை பாதித்துள்ளது. அவரது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களால், ஹரிஷை இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியவில்லை. கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
தங்களது மகனை இயல்பு நிலைக்கு மீட்டு விட வேண்டும் என்று 13 ஆண்டுகளாக ஹரிஷின் பெற்றோரும் போராடினர். எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை.
டிராகியோஸ்டோமி சுவாச கருவி பொறுத்தப்பட்டு, காஸ்ட்ரோஜெஜூனோஸ்டிமி குழாய்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஹரிஷின் பெற்றோர் தங்களது மகனை கருணை கொலை செய்ய கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மனு இன்று (மார்ச் 11) நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டிடத்திலிருந்து விழுந்ததில் கடந்த 13 ஆண்டுகளாக மீள முடியாத நிரந்தர செயலிழந்த நிலையில் இருந்து வரும் 32 வயது இளைஞருக்கு, உயிர் காக்கும் மருத்துவ ஆதரவை விலக்கிக் கொள்ள நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
இந்த உத்தரவின் போது நீதிபதிகள் “தற்போது 32 வயதாகும் ஹரிஷ் ராணா, ஒரு காலத்தில் சுறுசுறுப்பான, பிரகாசமான இளைஞராக இருந்தார். தான் தங்கியிருந்த விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்ததில், அவரது வாழ்க்கையையே மாறி போனது. அந்த மூளைக் காயம் அவரை 100% முடக்குவாதத்துடன் நிரந்தர செயலிழந்த நிலையில்விட்டுச் சென்றது.
கடந்த 13 ஆண்டுகளில் அவரது மருத்துவ நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவ அறிக்கைகள் காட்டுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட PEG குழாய்கள் வழியாக வழங்கப்படும் மருத்துவ ரீதியிலான ஊட்டச்சத்து மூலம் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
எனவே நோயாளிக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ ரீதியிலான ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘வாழ்வதற்கான உரிமை’ என்பது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது” என்று கூறினர்.
இந்த தீர்ப்பை நீதிபதி பர்திவாலா கண்ணீருடன் வழங்கியுள்ளார்.
