“தமிழக முதல்வர் ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என கட்டாயப்படுத்துவீர்களா?” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ரீநகரில் மெகபூபா முப்தி நேற்று (டிசம்பர் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரி மொழியில் மெகபூபா முப்தி பேசினார். ஆனால் அங்கிருந்த செய்தியாளர்கள், “உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்” என அவரை கட்டாயப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த மெகபூபா முப்தி, “உங்களுக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறதா? ஏன்? மொழிபெயர்த்து கொள்ளுங்கள்..
ஸ்டாலினிடம் (தமிழக முதல்வர்) போய் உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என உங்களால் ஏன் கேட்க முடியவில்லை?” என கேள்வி கேட்டு வாயடைக்க வைத்தார்.
மேலும் பத்திரிகையாளர்கள், காஷ்மீரி மொழிக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்றும் மெகபூபா முப்தி வலியுறுத்தினார்.
அவரது இந்த பிரஸ் மீட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
