தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக தலைமையில் 22 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி தேர்தலில் போட்டியிட உள்ளது.
இதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு (சிபிஐ & சிபிஎம்) தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கருணாஸ், தமிழ் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகள் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் தொகுதிகள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பித்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவிடம் அர்ஜுனராஜ் தலைமையிலான மதிமுக நிர்வாகிகள் விருப்பத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ளனர். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் எந்தெந்தத் தொகுதிகள் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் மதிமுகவினரும் கலந்துகொண்டனர்.
பின்னர் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சின்னத்தில் போட்டியிட முடியவில்லை எனச் சிரித்துக்கொண்டே அளிக்கிறோம். நாங்கள் கேட்ட தொகுதிகளைத் தந்ததில் மகிழ்ச்சி. ஆனால் எண்ணிக்கை குறைத்துக்கொண்டதில் வருத்தம். மதிமுகவின் தகுதிக்குத் தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோல் எங்கள் சின்னத்தில் போட்டியிடமுடிய வில்லை என்ற வருத்தமும் உள்ளது.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் என்பது தான் எங்கள் நிலைமை. மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் தெரியவரும்” என்றார்.
