திமுக தலைமையிலான கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது; இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Vaiko DMK MDMK
சென்னையில் மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் எதற்காக இணைந்தோம் என மிகத் தெளிவான அறிக்கை கொடுத்தோம். இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டிலே காலூன்றிவிடக் கூடாது என்பதற்காக, திராவிடர் இயக்கத்தைப் பாதுகாப்பதற்காக திமுகவுடன் மதிமுக உடன்பாடு கொண்டு கூட்டணியிலேயே சேருவது என்று உயர்நிலைக் குழுவில் முடிவெடுத்தோம். அதையே பொதுக்குழுவும் ஏற்றுக் கொண்டது.
இந்த அடிப்படையில்தான் திமுகவுடன் நாங்கள் உடன்பாடு வைத்தோம். இன்றைக்கும் அதே நிலைப்பாடுதான். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு பீரியட் ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தாங்க.. அவ்வளவுதான். இது பற்றி எல்லாம் தேர்தல் வரும் போது கூட்டணியில் பேச வேண்டிய பேச்சு. நாங்கள் எந்த விரக்தியிலும் இல்லை. நாங்க எல்லா கட்டங்களையும் கடந்தவர்கள். ஒரு தேர்தலையே முழுமையாகப் புறக்கணித்தவர்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் அப்படி செஞ்சது இல்லை. அதனால நாங்க எந்த ஒரு சூழ்நிலைக்கும் தயாராக இருப்போம். ஆனால் நாங்கள் திமுக கூட்டணியில் தொடருவோம் என உறுதிப்பட முடிவு எடுத்துள்ளோம். மதிமுகவின் பொதுக்குழுவிலும் இன்றைய நிர்வாகக் குழுவிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு வைகோ கூறினார்.