உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று போராட்டக்காரர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தை விட்டு கலைந்து செல்லுமாறு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (ஆகஸ்ட் 13) வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டல தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு பகலாக அங்கேயே தங்கி இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இன்று தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு போலீஸாருக்கு இன்று உத்தரவிட்டது.
முன்னதாக இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து மேயர் பிரியா பேசுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. அவர்கள் முக்கியமாக பணி மற்றும் சம்பள பாதுகப்பு கோரியுள்ளனர். இதற்கிடையே போராட்டக்காரர்களை இங்கிருந்த அப்புறபடுத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் போராட்டம் நடத்துவதற்கு என்று சில பகுதிகள் உள்ளன. அங்கு போலீசார் அனுமதியுடன் போராட்டம் நடத்தலாம். எனவே நீதிமன்ற உத்தரவின்படி போராட்டக்காரர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தை விட்டு கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வரும் தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைவதற்கு வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பணி பாதுகாப்பு இருக்கும் என்பதை மாநகராட்சி சார்பில் உறுதியளிக்கிறோம்.
மேலும் இப்போது ஒப்பந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாளர்களுக்கு பிஎஃப், ஹெல்த் இன்சுரன்ஸ், போனஸ், குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் பண்டிகை காலை சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதிக சலுகைகள் வழங்கப்படுவதால் உடனடியாக சம்பளத்தை உயர்த்த முடியாது. அவர்கள் பணியில் சேர்ந்த பின்பு வரக்கூடிய நாட்களில் அது உயர்த்தப்படும்” என்று மேயர் பிரியா தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மதியம் முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை முழுவதுமாக காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது. தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும், இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் இணை ஆணையர் விஜயகுமார் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
எனினும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வரும் வழக்கறிஞர பாரதி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , “போராட்டம் 100% தொடரும். முதலமைச்சர் தலைமையில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் அடுத்தக்கட்ட முடிவெடுப்போம். அதுவரை அவர்களால் முடிந்தால் அப்புறப்படுத்தச் சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
இதனால் அங்கு தொடர்ந்து போலீசார் குவிந்து வரும் நிலையில், ரிப்பன் மாளிகை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.