தமிழ்நாட்டில் இந்தி திணைப்புக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் (மார்ச் 12) போராட்டம் தொடர்ந்தது.
நேற்று மொழிப்போர் தியாகி தாளமுத்து நினைவு நாளில் இந்தப் போராட்டம் தொடங்கியது. அப்போது, சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அளித்து மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையில் முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ரயில் நிலையத்திலிருந்து ஒரு சில பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக ஒரு தம்பதியினர், இவர்களது போராட்ட பேனரை கையில் ஏந்தி இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
மே 17 இயக்கத்தினர் ரயில் நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் பூசி அளித்துக் கொண்டிருந்தபோது ரயில்வே போலீசாருக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதெல்லாம் ரயில்வே சொத்துக்கள் இப்படி செய்யக்கூடாது என்று ரயில்வே போலீசார் சொல்ல… ஆனால் இது தமிழ்நாடு என்றும் இந்தி மொழியால் எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மே 17 இயக்கத்தினர் பதிலளித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவா திலீபன் ‘தமிழ் வாழ்க’ என சொல்லியவாறு திடீரென ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “மோடியின் கடந்த வருகையின் போது, “… தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் திணிக்கப்பட்ட இந்தியை மாற்றிடுங்கள், இல்லையெனில், ஆதிக்க இந்தியை நாங்கள் அழித்திடுவோம்..” எனும் போராட்டத்தை மே17 நடத்தியது. அறிவித்ததை போல, இன்றைய (நேற்று) மோடி வருகையின் போது மே17 தோழர்கள் இந்தியை அழித்தோம். சொன்னதைச் செய்தோம்.
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகக்ளை அழித்து முழக்கமிட்டோம்.
இந்தி திணிப்பை தமிழர்கள் ரசிக்கவில்லை. இந்தி திணிப்பால் வேலைவாய்ப்பு பறிபோவதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
“ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன..இதனால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு வேலைகளை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். வங்கிகள், ரயில்வே, இன்சூரன்ஸ், என்.எல்.சி, வருமானவரி, சுங்கவரி என அனைத்து இடங்களிலும் இந்தி பேசும் மாநிலத்தவர்களே அதிகம். பஞ்சாப், மராத்தியம், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலத்தவர்களும் தேர்வாவதில்லை… ஆகவே இந்தி கற்றுக்கொண்டாலும், நமக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. இதனால் தான் சொல்கிறோம், இந்தி ஒழியட்டும், தமிழ் வெல்லட்டும்…” என முழக்கமிட்டு உரை நிகழ்த்திய போது வெகுமக்கள் கைதட்டினார்கள், ஆமோதித்தார்கள்…
இந்த எழுச்சிகரமான போராட்டத்தில் சென்னை பார்க் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த நபர் சுயநினைவற்ற நிலையிலும் தமிழ் வாழ்க என்று முனகி வருவதாக தகவல்கள் வருகின்றன.
