பதவியேற்றார் மனோ தங்கராஜ்… சிரித்துப் பேசிய ஆளுநர்-முதல்வர்

Published On:

| By Aara

தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ், ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப்ரல் 28) மாலை நடந்த எளிய நிகழ்ச்சியில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். Mano Thangaraj returns to TN Cabinet

ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் பதவியேற்பின் போது ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து இனிய வகையில் பேசிக் கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் சட்ட விரோதமாக செயல்படுவதாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களை தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம் சட்டமாக்கி ஒப்புதல் அளித்தது. இது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.  

இதன் பின் கடந்த ஏப்ரல் 25, 26 தேதிகளில்  ஊட்டியில் ஆளுநர் கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. துணை வேந்தர்கள் தமிழக அரசால் மிரட்டப்பட்டதாக ஆளுநர் சர்ச்சைக் கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட மோதலான சூழ்நிலையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினும் இன்றைய பதவியேற்பு விழாவில்  கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் ஆளுநரும் முதல்வரும் என சமூக தளங்களில் விவாதமே நடந்து வருகிறது. Mano Thangaraj returns to TN Cabinet

கருத்து மோதல்கள் எவ்வளவு இருந்தாலும் தனி நபர் நாகரிகத்தின் உச்சமாகவும் இந்த காட்சி வர்ணிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share