தமிழகம் மற்றும் கேரளாவில் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
திருவனந்தபுரம் நகரில் நேற்று கேரள அரசு சார்பில் “தொலைநோக்கு 2031: வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்” என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு விளம்பர நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிசங்கர் ஐயர் பேசும்போது, “பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இந்தியாவில் முன்னோடியாக கேரளா உள்ளது. எனது கட்சி சகாக்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. இது ஒரு மாநில விழா அல்ல; தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழா. கேரளாவில் உறுதியாக பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக வருவார்” என்றார்.
மணி சங்கர் ஐயரின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “மணிசங்கர் ஐயர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவர் தனது தனிப்பட்ட கருத்துகளை மட்டுமே தெரிவித்து வருகிறார். இடதுமுன்னணியை அகற்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன், “Vision 2031 சர்வதேச மாநாட்டின் போது மணிசங்கர் ஐயரின் கருத்துகள் சமகால சூழ்நிலையுடன் ஒத்துப்போகின்றன. மக்களிடம் அதிகாரம் இருக்கும்போது மட்டுமே ஜனநாயகம் செழிக்கும். வளர்ச்சியின் இதயத்துடிப்பாக உள்ளூர் நிர்வாக அமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
