ADVERTISEMENT

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் மரணம்.. சாலை மறியல் போராட்டம்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு!

Published On:

| By Mathi

Manamadurai Lockup Death

மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் ஆகாஷ் (26) மரணம் தொடர்பாக விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆகாஷ், அவரது நண்பர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே மார்ச் 5-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த மார்ச் 6-ந் தேதிமதியம் ஆகாஷ் உட்பட 5 பேர், மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இவர்கள் கைது தொடர்பாக குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மார்ச் 7-ந் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் ஆகாஷை போலீசார் அனுமதித்துள்ளனர். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷின் கால் முறிக்கப்பட்டிருந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் மார்ச் 8-ந் தேதி சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட 4 பேர் இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆகாஷின் மரணத்துக்கு காவல்துறையின் சித்திரவதையே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் சிபிஎம் உள்ளிட்ட கட்சியினரும் ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.

ADVERTISEMENT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நேற்று காலை முதல், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆகாஷ் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share