“கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் காட்டமாக கூறியுள்ளார்.
வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கரூர் துயரம் போல் வேறெங்கும் நடைபெறாமல் இருக்க வழிகாட்டு நெறிமுகைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 3) நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஏற்பாட்டாளர்கள், தலைவர் ஆகியோர் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். மக்களை, குழந்தைகளை மீட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.கவுக்கு கடும் கண்டனம்.
வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் தவெகவினர் எங்கே சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். அவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை. இது மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று தெரிவித்துள்ளார் நீதிபதி செந்தில் குமார்.