கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையுடன் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை விரட்டி விரட்டி மிதித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இருக்க கூடிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தென்படும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சம்பவம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. சாலையில் நின்றிருந்த காட்டு யானையுடன் அப்பகுதியில் சென்றவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அந்த நபரை காட்டு யானை விரட்டி சென்று மிதித்தது. யானை தாக்கிய நபர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.
காட்டு யானையிடம் அத்துமீறிய அந்த நபர் யார் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் கர்நாடக வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து பந்திப்பூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பெயர் பசவராஜ் என்பதும், மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் அவர் செய்தது தவறு தான் எனவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறுவதையும் வனத்துறையினர் வீடியோ எடுத்துள்ளனர். பசவராஜ் மன்னிப்பு கேட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.