சிபிஐ அதிகாரி என கூறி பல இடங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சித்திரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசில் வேலைவாங்கித் தருவதாக கூறி டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சித்திரவேல் கோவையில் தங்கி இருப்பதாக டெல்லி சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கோவை வந்த சிபிஐ அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரி தோற்றத்தில் போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட சித்தரவேலை மத்திய ஆயுதப்படை காவல்துறை உதவியுடன் தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 15) காலை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை டெல்லி அழைத்துச்செல்ல மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி அளித்த நிலையில் சித்திரவேலை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்துச் சென்றனர். டெல்லியில் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.