’மம்முட்டிக்கு என்ன ஆச்சு’ என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னர் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியது. உடல்நலக்குறைவால் அவர் ரொம்பவே அவதிப்பட்டு வருவதாகவும் பொது இடங்களுக்கு வருவதை அறவே அவர் தவிர்ப்பதாகவும் சொல்லப்பட்டது. அவர் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சில செய்திகள் வெளியானது. ‘எல்2: எம்புரான்’ பட வெளியீட்டை ஒட்டி சபரிமலைக்கு நடிகர் மோகன்லால் சென்றபோது, மம்முட்டி பெயரில் அவர் அர்ச்சனை செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வளவு ஏன், சமீபத்தில் பெருவெற்றி அடைந்துள்ள ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ படத்திற்கான புரோமோஷனுக்காக சென்னை வந்திருந்த துல்கர் சல்மானிடம் மம்முட்டியின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘ஹி இஸ் பைன்’ என்ற பதிலுடன் அவர் முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில், மம்முட்டி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால், பகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா நடித்துவரும் ’பேட்ரியாட்’ படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் ஸ்டூடியோவில் அக்டோபர் மாதம் முதல் நடக்கவிருக்கிறது. அதில் மம்முட்டி கலந்துகொல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொச்சியிலுள்ள வீட்டில் மம்முட்டி இல்லை என்றும், சில மாதங்களாகவே அவர் சென்னையில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் அதிகளவில் கூடுமிடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்பது உட்படப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ‘பேட்ரியாட்’ தளம் இருக்குமென்று சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், ‘பிரேக்’க்கு ‘பிரேக்’ விட்டு மீண்டும் மம்முட்டி களம் இறங்கப் போகிறார்..!