ஒரு எழுத்தாளரின் சிறுகதை, நாவல் அல்லது கட்டுரையை கல்லூரி மாணவர்களின் பாடத்தில் இடம்பெறுவது அரிதாக நிகழும். கல்லூரி படிப்பை முடித்தவர்களில் சிலர் தங்களுக்குப் பிடித்தமான படைப்பாளியை அதன் வழியே அடையாளம் கண்டதும் உண்டு. அப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் கொண்ட கல்லூரிப் பாடத்தில் ஒரு சமகாலப் பிரபலத்தின் பெயர் இடம்பெறுவது சாதாரண விஷயம் அல்லவே..! அப்படியொரு புகழைச் சம்பாதித்திருக்கிறார் மலையாள நடிகரான மம்முட்டி. mammootty in college subjects
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் நான்காண்டு படிப்பான பிஏ வரலாறு (ஹானர்ஸ்) பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்களாகத் தேர்வு செய்து படிக்கிற பாடப்பிரிவுகளில் ஒன்றான ‘மலையாள சினிமா வரலாறு’ பாடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவாம்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பயிலும் முன்னர் மஹாராஜா கல்லூரியில் படித்தவர் மம்முட்டி. தான் படித்த கல்லூரியிலேயே தன்னைக் குறித்து மாணவர்கள் பாடமாகப் பயில்வதென்பது எத்தனை பெரிய கௌரவம்? அது எத்தனை பேருக்கு வாய்க்கும்?