கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லென் கஃபூர், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன் உள்ளிட்டோர் நடித்த ‘பிரேமலு’ மலையாளத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சுமார் 3 கோடியில் தயாரான இப்படம் 136 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது. அது மட்டுமல்லாமல், ‘ஃபீல்குட் ரொமான்ஸ் காமெடி’ என்று எக்காலத்திலும் கொண்டாடத்தக்க படங்களின் வரிசையில் சேர்ந்தது. mamitha baiju act as heroein of sangeeth prathap
அந்த ‘பிரேமலு’வில் சச்சின் எனும் நாயக பாத்திரம், ரீனு எனும் நாயகி பாத்திரத்தை விட ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தது அமல் டேவிஸ் பாத்திரம். நாயகனின் நண்பனாக இப்பாத்திரத்தில் சங்கீத் பிரதாப் நடித்திருந்தார்.

ஏற்கனவே ‘ஹ்ருதயம்’, ‘சூப்பர் சரண்யா’, ‘லிட்டில் மிஸ் ராவ்தர்’ உட்படச் சுமார் அரை டஜன் படங்களில் நடித்திருந்தபோதும், இப்படமே அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. வயிறு குலுங்கிச் சிரிக்கும் அளவுக்கு அப்படத்தில் ‘காமெடி’யில் அதகளம் செய்திருந்தார் சங்கீத் பிரதாப்.
இவர் ஒரு படத்தொகுப்பாளர் என்பது ஒரு உப தகவல். பத்ரோஷிண்ட படப்புகள், 4 இயர்ஸ், ஜெய் கணேஷ் மற்றும் சமீபத்தில் வந்த ‘சர்கீத்’ வரை இவர் தொடர்ந்து படத்தொகுப்பையும் கையாண்டு வருகிறார். விரைவில் வரவிருக்கும் ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் உடன் நடித்திருக்கிறார்.
இத்தனை தகவல்கள் இணையத்தில் காணக் கிடைத்தாலும், ‘பிரேமலு’வுக்குப் பிறகு நஸ்லென் உடன் சங்கீத் மற்றும் மமிதா இருக்கிற புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆயின. அது பற்றிய கேள்விகளுக்கு ‘மமிதா எனது தங்கை’ என்றே பதில் சொல்லி வந்தார் சங்கீத். ஆனாலும், அந்த புகைப்படங்களில் தெரிந்த புத்துணர்ச்சி திரையிலும் மலர்ந்தால் எத்தனை சுவையாக இருக்குமென்று சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ‘கமெண்ட்’ செய்து வந்தனர்.
அதனை ஏற்கும்விதமாக, ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், டினோய் பவுலோஸ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகவிருக்கிற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ‘புரொடக்ஷன் நம்பர் 20’ எனப் பெயரிடப்பட்ட இப்படம் குறித்த தகவல்கள், மமிதா பைஜுவின் பிறந்தநாளையொட்டி நேற்று இத்தகவல் வைரலானது.

தற்போது விஜய் உடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதன் உடன் ‘டூயூட்’, சூர்யா 46 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் மமிதா. சமீபத்தில் சங்கீத் நாயகனாக நடிக்கிற ‘இட்ஸ் எ மெடிகல் மிராக்கிள்’ படம் குறித்த தகவலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் மமிதா பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
இது குறித்து சங்கீத் அல்லது மமிதா என்ன சொல்கின்றனர் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்..!