மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரபல கால்பந்து வீரர் லியோனஸ் மெஸ்ஸி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரை பார்க்க முடியாததால் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த கலவரத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் மம்தாபானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற ‘GOAT India Tour 2025’ நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி, கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியம் மைதானத்தில் பெரும் குழப்பத்துடன் முடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஏற்பட்ட மோசமான மேலாண்மையால் ரசிகர்கள் அதிருப்தியடைந்து கலவரம் ஏற்பட்டது.
மெஸ்ஸி இன்று அதிகாலை கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தார். அவர் லேக் டவுனில் அமைக்கப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸி சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். மெஸ்ஸியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கை தட்டி வரவேற்றனர். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களை வாழ்த்துவார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
We want Messi
ஆனால், மெஸ்ஸி மைதானத்தில் 10 முதல் 20 நிமிடங்களே இருந்தார். அப்போதும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சூழ்ந்ததால், கேலரியில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவரை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த திரைகளிலும் மெஸ்ஸியை சரியாக பார்க்க இயலவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் “We want Messi!” என கோஷமிட்டனர். சிலர் அமைப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை எதிர்த்து கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து மெஸ்ஸி உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் சில ரசிகர்கள் ஆத்திரத்தில் நாற்காலிகளை உடைத்தும், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
சிலர் மைதானத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் சில ரசிகர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரசிகர் குற்றச்சாட்டு
இந்நிலையில், மெஸ்ஸியின் ரசிகர் ஒருவர், ““மிகவும் மோசமான நிகழ்ச்சி. அவர் வெறும் 10 நிமிடங்களுக்காக மட்டுமே வந்தார். அனைத்து தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. அவர் ஒரு கிக் கூட, ஒரு பெனால்டி கூட அடிக்கவில்லை. ஷாருக்கானையும் அழைத்து வருவார்கள் என்று கூறினர். ஆனால் யாரையும் அழைத்து வரவில்லை. அவர் 10 நிமிடங்கள் வந்து புறப்பட்டுச் சென்றார். இவ்வளவு பணம், உணர்ச்சிகள், நேரம் அனைத்தும் வீணானது. எங்களால் எதையும் பார்க்க முடியவில்ல” என தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்ட மம்தா
இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட மோசமான மேலாண்மையைப் பார்த்து நான் மிகுந்த அதிர்ச்சியிலும் மனவேதனையிலும் உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. அவரை ஒரு முறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் நானும் ஸ்டேடியம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, லியோனல் மெஸ்ஸியிடமும், அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும், பொறுப்புகளை நிர்ணயிக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நான் ஓய்வு பெற்ற நீதிபதி அஷிம் குமார் ராய் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். இந்தக் குழு சம்பவத்தை விரிவாக விசாரணை செய்து, பொறுப்பை நிர்ணயம் செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.” என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவததாக அம்மாநில டிஜிபி ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர். மாநில அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ரசிகர்கள் அனைவருக்கும் கட்டணத்தை திரும்ப தருவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் அதிகஅளவில் கூட்டம் கூடியதால் மெஸ்ஸி அங்கிருந்து உடனடியாக கிளம்பியதாகவும் ரசிகர்கள் சிலர் குற்றம் சாட்டி உள்ளனர்.
மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
