’இவர் இப்படித்தான்’ என்று ரசிகர்கள் கொண்டிருக்கிற முன்னப்பிப்ராயங்களைத் தகர்க்கிற வகையில் ஒரு பிரபலம் பேசினால், செயல்பட்டால், வாழ்ந்தால் எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு நிலைக்கு ரசிகர்களை ஆட்படுத்தியிருக்கிறார் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். ’கலாசலா’ பாடலில் வருவாரே அவர்தான். குரு, தசாவதாரம், ஒஸ்தி, பாம்பாட்டம் படங்கள் வழியே தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமானவர் தான். mallika sheawat request all her fans on makeup
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ‘செயற்கைப் பூச்சுகளால் அழகுபடுத்திக் கொள்வதைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்வது தானே முக்கியம். அதனால் இயற்கையான அழகு போதுமே’ என்று ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.
அந்த வீடியோவில் “இந்த விடியோவில் பில்டர் எதுவுமில்லை. எந்த மேக்கப்பும் இடவில்லை. தலைமுடியைக் கூட வாரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ந்த இந்தி நடிகை ஷெஃபாலி ஜாரிவாலாவின் திடீர் மரணத்திற்கு, இளமையாக வைத்துக்கொள்வதற்கான மருந்துகளை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் அழகு சாதனப் பொருட்களின் பயன்பாடு மற்றும் அதீத நுகர்வு பற்றிய பல கேள்விகளை அச்சம்பவம் எழுப்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, மல்லிகா ஷெராவத் இந்த பதிவை இட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கூடவே உணவில் சுத்தம், உடலில் நீர் சமநிலை, முன்கூட்டியே உறங்கச் செல்லுதல், தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இயற்கையான பொலிவை அனைவரும் பெறுவோம் என்றும் தனது பதிவில் சொல்லியிருக்கிறார் மல்லிகா.
மல்லிகா ஷெராவத் வீடியோவை பார்க்கிற அவரது உண்மையான ரசிகர்கள், ‘இந்த இயற்கை அழகோட ஸ்கிரீன்ல ஏன் வர மாட்டேங்குறீங்க’ என்று கேட்காமலிருந்தால் ஆச்சர்யம் தான்..!