மறுமலர்ச்சி திமுகவில் (மதிமுக) தமக்கு துரோகம் செய்த ‘மாத்தையா’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் மல்லை சத்யா.
மல்லை சத்யாவை, மதிமுகவில் இருந்து வைகோ இதுவரை நீக்கவில்லை; மதிமுகவை விட்டு மல்லை சத்யாவும் வெளியேறவில்லை.
மதிமுகவில் வைகோவுக்கு எதிரானவர்களை அணி திரட்டி வருகிறார் மல்லை சத்யா.
இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் அடுத்த காட்சிகள்தான் செப்டம்பர் 15-ல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அரங்கேறப் போகின்றன.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா மாநில மாநாட்டை செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் நடத்துகிறது வைகோவின் மதிமுக. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அதே செப்டம்பர் 15-ந் தேதியன்று மதிமுகவின் அதிருப்தியாளர்களை அணிதிரட்டி, பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவை முப்பெரும் விழாவாக காஞ்சியில் நடத்துகிறது மல்லை சத்யா அணி. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை அரிப்பிரியா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,
அண்ணா காலத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்த திருப்பூர் துரைசாமி ex MLA,
அண்ணா முன்னால் 1964-ல் கோகலே அரங்கில் உரையாற்றிய வைகோ ex MP ,
பேராசிரியர் அய்யா அப்துல் காதர்,
நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்,
டி ஆர் ஆர் செங்குட்டுவன்,
புலவர் செவந்தியப்பன் உள்ளிட்டோருக்கு “திராவிட ரத்னா” விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட மதிமுக செயலாளர் ஊனை பார்த்திபன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வைகோ திருச்சியில் மாநாடு நடத்தும் அதே நாளில் மதிமுகவினரை வைத்து மட்டுமல்ல வைகோவுக்கும் காஞ்சிபுரத்தில் திராவிட ரத்னா விருது கொடுப்பதாக மல்லை சத்யா அணி அறிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.