ஓணம் பண்டிகையையொட்டி மலையாளத்தில் வெளியான திரைப்படங்களில் மாயாஜாலத்தைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
நேற்று வரை இப்படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் 70 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. அடுத்த வார இறுதியில் இது 100 கோடியை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாய்ச்சலாகக் கருதப்படுகிற இப்படம் குறித்த கேள்விகளே ‘அவ்விடத்து’ நிறைந்திருக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் நடந்த கேரள கிரிக்கெட் லீக் போட்டியில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணியுடன் நடந்த உரையாடலின்போது ஒரு வீரரிடம் இருந்து ஒரு கேள்வியை எதிர்கொண்டார் மலையாள நட்சத்திரமான பசில் ஜோசப்.
’நீங்கள் லோகா படத்தில் இணைந்திருந்தால்..’ என்ற கேள்வியை அவரிடம் கேட்டிருக்கிறார் ஒரு கிரிக்கெட் வீரர்.
அதற்கு, ‘நான் அந்த படத்தில் நடித்திருக்க வேண்டியது. இயக்குனர் டொமினிக் அருண் என்னிடம் கதை சொன்னார். ஆனால், வேறு படங்களுக்கு தேதிகள் கொடுத்திருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை. பிறகு, அந்த பாத்திரத்தில் வேறொருவர் நடித்தார். அந்த வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார் பசில் ஜோசப்.
நம்மூரில் இப்படித் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்த விவரங்கள் சில, பல ஆண்டுகள் கழித்துதான் தெரிய வரும்.
இப்படி ஒப்பிட வச்சுட்டீங்களே பசில் சாரே..!