தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க நபர் ஸ்ரீனிவாசன். நகைச்சுவை கலந்த திரைக்கதை எழுதுவதில் கைதேர்ந்தவர். பிரபல சினிமா நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட ஸ்ரீனிவாசன். இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்த ஸ்ரீனிவாசன் சுமார் 225 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாசன் இன்று மரணமடைந்தார்.
இவருக்கு விமலா என்ற மனைவியும், பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான வினித் ஸ்ரீனிவாசன் என்ற மூத்த மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளனர்.
இவர் 6 முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். மகன் வினீத் ஸ்ரீனிவாசனுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் லேசா லேசா, புள்ள குட்டிக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நண்பனை இழந்து விட்டேன்
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில்,”என் அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் என் வகுப்பு தோழன். அவர் சிறந்த நடிகர் மற்றும் நல்ல மனிதர். நல்ல நண்பனை இழந்து விட்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
