– ஸ்ரீராம் சர்மா
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கிழக்கு திசையில் – அக்கினி மூலை எனப்படும் 40 டிகிரி கோணத்தில் – சினத்தோடு சிலம்பெறிந்த சிலப்பதிகார கண்ணகியாள் வாழ்ந்த காப்பிய வரலாற்றைப் பேசியபடி – வைகை ஆற்றங்கரையில் அமைந்திருப்பதாம் அந்த மாமதுரை.
தேவாரத் திருவாசகப் பாடல் பெற்ற ஸ்தலமாகும் அது !
சுல்தான்கள் – நாயக்கர்கள் – ஆங்கிலேயர்கள் எனப் பற்பலர் நுழைந்த போதிலும், தனக்கான தமிழ்க் கலாச்சாரத்தை கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்காது நின்று செழித்த தமிழகத்தின் மூன்றாம் பெரிய நகரமாம் மதுரையம்பதியதன் பெருஞ்சிறப்பு கொஞ்ச நஞ்சமானதல்ல !
அப்படிப்பட்டதான தமிழ்நிலமானது – தமிழ்நாட்டின் போற்றுதலுக்குரிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால்- 2025 ஆண்டின் டிசம்பர் திங்கள் 7 ஆம் திகதியில் தனக்கென மீண்டுமோர் பேரிடம் பெற்று விட்டது !
மேலுமது, இந்திய வரலாற்றின் வெற்றி மகாராணி வேலுநாச்சியாரின் வரலாற்றிலும் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது எனிலது மிகையன்று!
ஆம், அந்த இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் – இராமனாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் பெருந்துணையோடு – அன்றைய பாலவனத்தம் குறுநில மன்னராகிய பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நான்காம் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு சங்கத்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் துவங்கி…
தமிழ் மண்ணை அடிமை கொண்டாட வந்த அன்னியரை ஓட ஓட விரட்டி வெற்றி கொண்ட உலகின் ஒரே வெற்றி மகாராணியான வேலுநாச்சியார் நிறைந்து வாழ்ந்த சிவகங்கை மண்ணை இணைக்கும் வகையாக..
பிரம்மாண்டானதோர் பாலத்தினை அமைத்து – தமிழ் மண்ணின் வரலாற்றில் அழியாப் புகழ் கொண்டு விட்டார் தமிழ்நாட்டின் போற்றுதலுக்குரிய முதல்வர் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
குறித்துக் கொள்ளுங்கள்.

150.28 கோடி ரூபாய் செலவில் 950 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட அந்த மாமதுரை மேம்பாலமானது வெறும் கான்க்ரீட் கட்டுமானம் என எண்ணி விடலாகாது.
மாறாக, தமிழர்களின் வீரமும் – மொழி சார்ந்த உணர்வும் ஒன்றிணைந்ததாகும் என்பதை ஓங்கிச் சொல்லும் திராவிடச் சித்தாந்தத்தின் ஆகச்சிறந்த அடையாளப் பாலம் ஆகும் அது !
சென்னைதான் தலைநகர் எனினும் மதுரையை போற்றுவதும் எமது கடனே எனும் உணர்வுப் பாலமாம் அது !

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர், அடுத்த மூன்றே மாதத்தில் மதுரையில் வேலு நாச்சியார் பெயரில் மேம்பாலம் திறந்து வைக்கிறார் எனில், அவரது அரசாங்கத்தின் உள்ளார்ந்த நோக்கம் இழந்த தமிழ் மண்ணின் வரலாற்றை மீட்டெடுக்கும் உத்வேகம் அல்லவா? அதை நாம் போற்றியாக வேண்டும் அல்லவா ?
மண்ணின் பெருமை காக்க இதுபோல் விரைந்து ஆவன செய்வோர் வேறு எவரேனும் இங்குண்டா? கட்சி சார்பற்றதோர் எழுத்தாளனாக – கலைஞனாகத்தான் எழுதுகிறேன்!

அன்னியர்களால் மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரது உண்மை வரலாற்றினை 2004 ஆண்டு முதல் கலை வடிவில் மீட்டெடுக்கப் போராடியவனாகவும்…
அதனை நமது முதலமைச்சருக்கு முன் 60 தியேட்டர் கலைஞர்களொடு தமிழில் நிகழ்த்தி, அவரது அரவணைப்பினால் G20 உச்சி மாநாட்டில் ஆங்கில மொழியில் வெளிநாட்டு ஆளுமைகளுக்கு நிகழ்த்திக் காட்டி, மேலும், தலைநகர் புதுடெல்லியில் இந்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ முன்னெடுப்பில் ஹிந்தி மொழியில் நிகழ்த்திக் காட்டியவன் எனும் வகையிலும்…

இழந்த தமிழ் மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட விழைந்த பலரில் அடியேனும் ஒருவன் என்னும் முறையிலும்…
“வேலுநாச்சியார் மேம்பாலம்” அதனை பாங்குற அமைத்து வைத்த போற்றுதலுக்குரிய தமிழ்நாட்டின் முதல்வர் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை கண்ணீர் மல்க மெத்தப் பணிந்து நிற்கின்றேன்.
அவரது ஆட்சிக்குட்பட்ட அரசாங்கத்திடம் மேலும் சில வேண்டுகோளும் எனக்கு உண்டு.
- வேலுநாச்சியார் குறித்த தனிப் பாடம் நமது பள்ளிப் பாடங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
- பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை மீட்கும் வகையில் வேலுநாச்சியார் அமைத்த “உடையாள் படை“தற்காப்புப் படை பயிற்சியினை பள்ளிகள், கல்லூரிகள், கார்பொரேட் நிறுவனங்கள் எங்கும் நிறுவ வேண்டும்.
- வீர தீர செயல்களைப் பாராட்டி வழங்கப்படும் அண்ணா பதக்கத்தோடு – பெண்களுக்கான ‘குயிலி’ பதக்கமும் வழங்கப்பட வேண்டும்.
- சிவகங்கை மீட்புப் போரின் முதல் தியாகியாம் “உடையாள்” எனும் அந்த மாடு மேய்த்த நல்லவளுக்கு – அவள் குடிகொண்டிருக்கும் அந்த ‘கொல்லங்குடி வெட்டுடையாள் காளி’ கோயிலுக்கு ‘உடையாள்’ பெயரில் அறநிலையத் துறையின் சார்பில் ஆண்டு தோறும் அன்னதானம் செய்யப்பட வேண்டும்.
முடிவாக, சாதிமத பேதமின்றி எல்லோரையும் ஒன்றிணைந்து அன்னியருடன் போராடி தன் மண்ணையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுத்து வரலாற்றுப் பக்கங்களில் செம்மாந்து நிற்கும் மதுரையையும் – சிவகங்கையும் வெகு நீண்டு ஓடும் தனது ‘வேலுநாச்சியார் மேம்பாலம்’ அதன் மூலம் குறியீடாக ஒன்றிணைத்த திராவிட மாடல் மேம்பாலத்தை எவ்வளவு வாழ்த்தினாலும் அது தகும் !
கட்டுரையாளர் குறிப்பு:

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
