மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பொன் வசந்த் (மேயர் இந்திராணியின் கணவர்) நேற்று ஆகஸ்ட் 12-ந் தேதி இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து அரசுக்கு ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக பணிபுரிந்த சுரேஷ்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையராக பணியாற்றிய நிலையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேடு விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்துக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதனால் பொன் வசந்த் அண்மையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவரை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் பொன் வசந்த் மதுரையில் இருந்து தப்பி தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் பெறும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த பொன் வசந்த் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் பொன் வசந்த்தை சென்னையில் நேற்று இரவு கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேலும் பல திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படக் கூடும் என்பதால் பெரும் பரபரப்பு தொடருகிறது.