அன்புமணிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை 10ஆம் தேதிக்கு பிறகு விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாமகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் வடிவேல் ராவணனின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்கில் இணைக்க மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வடிவேல் ராவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் நீதிபதி தமிழ்செல்வியிடம், தங்கள் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது, ‘தந்தை மகன் பிரச்சனை எல்லாம் இன்றோ நாளைக்கோ முடிந்துவிடும். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்’ என்று கருத்து தெரிவித்த நீதிபதி தமிழ்செல்வி வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
அதன்படி வழக்கு இன்று (மார்ச் 17) விசாரணைக்கு வந்த போது, ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் உரிமையியல் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? அவசரமாக வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ராமதாஸ் எப்படி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்? தேர்தல் நடத்தப்பட்டதா?’ என்று கேள்விகளை எழுப்பினார்.
அப்போது ராமதாஸ் சார்பில், பிரதான வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். இது உள்கட்சி பிரச்சனை அதற்கும் தேர்தல் நடைமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும். உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது.
உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தேர்தல் முடிந்து மே 10ஆம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
