முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் பொன்முடியின் கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த சூழலில் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதேசமயம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் பொன்முடி பேசியது தொடர்பாக உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (செப்டம்பர் 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புகை பெறப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ”பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
எனினும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்று உத்தரவு பிறப்பித்தார்.