செப்டம்பர் முதல் வாரம் என்பதால், நாளை (செப்டம்பர் 5) வெளியாகிற படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்க வேண்டும். ஏற்கனவே சில திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, அப்படியொன்று நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அதனை மீறி இந்த வாரம் சில படங்கள் ஆச்சர்யங்கள் தரக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஐந்து முதல் 7 திரைப்படங்கள் வெளியாவதே வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரம் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ வருவதால் அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனாலும், வேறு மொழிகளில் சில படங்கள் வெளியாகவிருக்கின்றன. அவை என்னென்ன என்று காணலாமா?
மதராஸி
’மான் கராத்தே’வில் சிவகார்த்திகேயன் உடன் தயாரிப்பாளராக இணைந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் அவரோடு இயக்குனராகக் கைகோர்த்திருக்கிறார். ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் கல்லாரக்கல் என்று ஆச்சர்யப்படுத்துகிற ‘காஸ்ட்டிங்’ உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 168 நிமிடங்கள்.
காந்தி கண்ணாடி
விஜய் டிவி புகழ் பாலா நான்கைந்து படங்களில் ஏற்கனவே நடித்திருந்தபோதும், அவர் நாயகனாக அறிமுகமாகிற படம் இது. நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. ’ரணம்’ தந்த ஷெரிஃப் இதன் இயக்குனர். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன் எனப் பலர் இதில் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இதற்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தின் நீளம் 129 நிமிடங்கள்.
பேட் கேர்ள்
வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள இப்படத்தை வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அஞ்சலி சிவராமன், சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ருது ஹாரூண், டீஜே அருணாச்சலம், சஷாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ பாடல் நாயகி சாந்திபிரியாவும் இருக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்படுத்திய பெரும் சர்ச்சை, இதன் மீது கவனக் குவிப்பை உருவாக்கியுள்ளது. இந்தி இசையமைப்பாளர் அமித் த்ரிவேதி இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் நீளம் 112 நிமிடங்கள்.
ஹாட்டி!
தெலுங்கில் விக்ரம் பிரபு அறிமுகமாகும் ‘ஹாட்டி’ படம் இந்த வாரம் வெளியாகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தருகிற இப்படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். கிரிஷ் ஜகர்லமுடி இதனை இயக்கியுள்ளார். தமிழிலும் வெளியாகிற இப்படத்தின் நீளம் 156 நிமிடங்கள்.
இவை தவிர்த்து டைகர் ஷெராஃபின் ‘பாஹி 4’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘உஃப் யே சியாபா’, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ தந்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் ’தி பெங்கால் பைல்ஸ்’ ஆகியன இந்தியில் இந்த வாரம் வெளியாகின்றன.
ஹாலிவுட் ஹாரர் விரும்பிகளுக்காக ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ இந்த வாரம் வெளியாகிறது. இது தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஓணம் வெளியீடாக வந்தவற்றில் ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ பிளாக்பஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளது. இதன் தமிழ் ‘டப்’ பதிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக தியேட்டரை விட்டு அகலாமால் ரசிகர்களைப் பீடித்து வைத்திருக்கும் படங்களும் சில இருக்கின்றன.
மேற்சொன்னவற்றில் எவற்றை ரசிகர்கள் ரசிக்கப் போகின்றனர். ஓரிரு நாட்களில் இதற்கான பதில் தெரிந்துவிடும்..!