தீனா, ரமணா, கஜினி என ‘ப்ளாக்பஸ்டர்கள்’ கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தந்த சுமார் வெற்றிப் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘ஸ்டாலின்’. ‘ஏழாம் அறிவு’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் ‘அகிரா’, ‘ஸ்பைடர்’ பெருந்தோல்வியைச் சந்திக்க, அதன் நீட்சியாகிப் போனது ‘தர்பார்’. இத்தனைக்கும் ரஜினிகாந்த் உடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைகிறார் என்றபோதும், அந்த காலகட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகவில்லை. அந்த படமும் அதனைத் தாண்டுகிற வகையில் சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில்தான், அவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘மதராஸி’ வெளியானது. சிவகார்த்திகேயன், அனிருத் என்று ‘ஜென்ஸீ’ தலைமுறைக்கு ‘ஹை’ கொடுக்கிற பிரபலங்கள் இருந்தபோதும், ரிலீஸுக்கு முன்னால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகவில்லை. தமிழ்நாடு முழுக்கவே முன்பதிவும் சிறப்பாக அமையவில்லை.
ஆனால், படம் வெளியானபிறகு நிலைமை மாறியது. தற்போது வெற்றிகரமாக அப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர் சுதீர் சீனிவாசனின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மொட்டைத் தலையுடன் காட்சியளித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்தியதாக’க் கூறியிருந்தார்.
தான் இயக்குனராக அறிமுகமான ‘தீனா’ வெற்றியடைந்தபோது பழனி மலைக்குச் சென்றதாகவும், அதன்பிறகு இப்போது மீண்டும் அந்த அனுபவத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இரண்டு நிகழ்வுகளுக்குமான ஒற்றுமை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, ‘மதராஸி கிட்டத்தட்ட எனக்கு இன்னொரு முதல் படம் தான்’ என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கொரோனா காலகட்டத்தில் அந்த நோய் பரவல், மரணங்கள் குறித்த செய்திகள் தன்னைப் பயமுறுத்தியதாகவும், அப்போது சினிமா குறித்து தன்னால் சிந்திக்கவே இயலவில்லை என்றும் தெரிவித்தார்.
அதன்பிறகு ஒரு திரைப்படத்திற்கான பணிகள் ‘ஸ்கிரிப்ட்’ நிலை வரை சென்று நின்று போனதாகவும், இரண்டு ஆண்டுகள் ஒரு அனிமேஷன் படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் வரை சென்று நின்றதாகவும், அதனால் ஐந்தாண்டு கால இடைவெளியை ‘மதராஸி’யில் எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
‘இந்த படம் வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்’ என்று பழனி மலையில் வேண்டிக்கொண்டதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் முருகதாஸ்.