Maayakoothu Tamil Movie Review 2025
சமத்துவம் பேசுகிறதா இந்த ‘அசாதாரணமான’ கதை!
ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம் பார்வையாளர்களை எளிதில் வசீகரிக்க வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கான இந்த இலக்கணத்தை மீறுகிற படங்கள் ‘மாற்று சினிமா’வாக நோக்கப்படுகின்றன. இரண்டுக்கான வரையறைகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துகொண்டு சில திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. ‘இதில் எந்த வகையில் மாயக்கூத்து அடங்கும்’ என்ற கேள்வி படம் வெளிவரும் முன்னர் எழுந்தது. அதற்குக் காரணம், அந்த படத்தின் உள்ளடக்கம் சிறப்பானதாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் உள்ளதாகச் சொல்லப்பட்டதே. Maayakoothu Tamil Movie Review 2025
ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், மு.ராமசாமி, சாய் தீனா, கே.கோபால், மறைந்த டெல்லி கணேஷ், எஸ்.கே.காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘மாயக்கூத்து’ திரையில் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
‘அசாதாரணமான’ கதையா?

சில இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் வாசன் (நாகராஜன் கண்ணன்). அந்த கதைகளில் அவர் எளிய கதாபாத்திரங்களைக் கையாள்கிற விதம் மோசமானதாக இருக்கிறது. ’யதார்த்தத்தைச் சொல்கிறேன் பேர்வழி’ என்று கதையில் அவரால் முன்வைக்கப்படுகிற திருப்பங்கள், அதனைப் படிக்கிற வாசகர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கின்றன. மிக முக்கியமாக, சமூகத்தில் சமத்துவம் உருவாவதை எதிர்க்கிற தொனி அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.
அக்கதைகளைப் படிக்கிற வாசகர்கள், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அப்படி விமர்சிக்கிறவர்களை எளிதாகத் தூக்கி எறிகிறார் வாசன். ஆனால், அந்த கதாபாத்திரங்களே நேரில் வந்து உரையாடுகிறபோது, அவரால் அதனைச் செய்ய முடிவதில்லை. மாறாக, பயத்தில் உச்சத்திற்குச் செல்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த கதாபாத்திரங்களால் தனது உயிருக்குக் கூட ஆபத்து நேரலாம் என்று அவர் அஞ்சுகிறார். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘மாயக்கூத்து’.
நிச்சயமாக, இது ‘அசாதாரணமான’ கதை தான். உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல், கதையின் மையக்கருத்தை கிளைமேக்ஸில் உணர்த்தியிருக்கிற விதமும் வழக்கத்திற்கு மாறானதாகவே உள்ளது. அதுவரை கதாபாத்திரங்களின் துரத்தலால் பாதிக்கப்படுகிற எழுத்தாளரைப் பற்றிப் பேசுகிறது இப்படம். Maayakoothu Tamil Movie Review 2025
யார் இவர்கள்? Maayakoothu Tamil Movie Review 2025

சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் வாசிக்கிற ஆர்வம் குறைந்து கொண்டிருக்கிற சூழலில்தான் ‘ஒலி வடிவ புத்தகங்கள்’ விற்பனை அதிகமாகி வருகிறது. நாடக பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ‘வைரல்’ ஆகின்றன.
அதற்காக அவற்றின் உள்ளடக்கம் நவீனமானதாக, சமத்துவம் பேசுவதாக, நல்லதொரு எதிர்காலத்தைக் கட்டமைப்பதாக இருக்கிறதா என்றால் ‘ப்ச்’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனை உரக்கப் பேசுகிறது ‘மாயக்கூத்து’.
ஆனால், அதற்காக அப்படம் தேர்ந்தெடுக்கிற வழியும் ‘நவீன நாடக’ பாணியைத் தொட்டுச் செல்வதாக இருக்கிறது. அதுதான் ‘மாயக்கூத்து’ திரைக்கதையோடு நாம் ஒன்றுவதில் இருக்கிற பிரச்சனை. Maayakoothu Tamil Movie Review 2025
பிரதானமாக வரும் வாசன் பாத்திரம் எழுத்தாளர் என்ற மமதையோடு திமிராகத் திரிவதும் சக மனிதர்களிடம் இருந்து தான் உயர்ந்தவன் என்று வெளிக்காட்ட முற்படுவதும், அப்பாத்திரத்தின் ‘எழுத்து நடை’யிலான பேச்சை நியாயப்படுத்துகிறது. அப்படிப்பட்ட உரையாடல்கள் மிகவும் எளிமையாக இல்லை என்பது வருத்தம் தருகிற விஷயம்.
இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ராகவேந்திரா. திரைக்கதையை எம்.சீனிவாசன் உடன் இணைந்து அமைத்திருக்கிறார். நாயகனாக நடித்துள்ள நாகராஜன் கண்ணன், இதன் வசனங்களை எழுதியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் இயக்கிய ‘மாயக்கண்ணாடி’ வெளியானது. சட்டென்று முன்னேறத் துடிக்கிற இளைய தலைமுறையினரின் அவசரகதியிலான முடிவுகளை, அவற்றின் விளைவுகளைப் பேசியது. அதில் கதாபாத்திரங்களின் வாழ்வு, அதில் நிகழ்கிற திருப்பங்கள், அதனால் மையப்பாத்திரத்தின் புரிதல்களில் ஏற்படுகிற மாறுதல் வழியே தான் சொல்ல வந்த கருத்தைச் சன்னமாக உணர்த்தியிருந்தார் சேரன்.
கிட்டத்தட்ட அப்படியொரு கதை சொல்லலைக் கொண்டிருக்கிற ‘மாயக்கூத்து’, அதிலிருந்த எளிமையையும் கைக்கொண்டிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், கலை இயக்குனர் கே.பி.நந்து, படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் உள்ளிட்ட சில தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பு இதில் திறம்பட அமைந்துள்ளது.

இப்படத்தில் ஒலி வடிவமைப்பு, டிஐ பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஈர்ப்பைத் தருகிறது.
இளமையில் வறுமையைச் சந்தித்த ஒரு மனிதன் சாதி, மத வேறுபாடுகளை சுமக்கிற பாத்திரத்தை மிக எளிதாகக் கையாண்டிருக்கிறார் நாகராஜன் கண்ணன். திரையில் ஒலிக்கும் குரல் இரவலா, அவருடையது தானா என்று தெரியவில்லை.
அவரது மனைவியாக வரும் எஸ்.கே.காயத்ரி கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறார்.
இது போக மு.ராமசாமி, கோபால், சாய்தீனா, சரண்யா சிவசங்கர், ஐஸ்வர்யா ரகுபதி, பிரகதீஷ்வரன், மிருதுளா, ரேகா குமணன், தினேஷ் செல்லையா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். Maayakoothu Tamil Movie Review 2025
நாயகனோடு நிஜ வாழ்வில் இடம்பெறுபவர்களாகச் சிலரும், அவரது கதையின் பாத்திரங்களாகச் சிலரும் வந்து போயிருக்கின்றனர். அப்பாத்திரங்களின் வார்ப்பு, காட்சிகள் ஓரளவுக்கு எளிமையின் அருகில் நிற்பது நல்ல விஷயம்.
‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’, ‘கள்ளனை நம்புனாலும் குள்ளனை நம்பாதே’ என்று தோற்றம் சார்ந்த கணிப்புகள், அனுமானங்கள் எந்தளவுக்கு தவறானவையோ, அதனை விட ஒரு படி மேலாகவே சாதி, மதம் சார்ந்து பொதுச்சமூகத்தில் நிலவுகிற சில வரையறைகள் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கி வருகின்றன. அவற்றைக் கேள்வி கேட்ட வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு படைப்பாக மாறியிருக்கிறது. Maayakoothu Tamil Movie Review 2025
இந்த படம் 25 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாகச் சொல்லப்படுகிறது. இன்று கோடிகளில் எடுக்கப்படுகிற திரைப்படங்களே ‘கந்தல் துணியாக’த் திரையில் சுருண்டு விரிகிற சூழலில் இப்படம் தருகிற திரையனுபவம் ஆச்சர்யம் தருவதாக உள்ளது.
வித்தியாசமானதொரு திரைப்படைப்பைக் காண வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் இந்த ‘மாயக்கூத்து’..!