சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கும், பயணிகளின் மன உளைச்சலுக்கும் தீர்வு காண வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் என 400க்கும் அதிகமான விமானங்கள் நாளொன்றுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிலவும் குளறுபடிகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு நேற்று (செப்டம்பர் 6) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சமீப காலங்களில், சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு ஏடிஆர் விமானங்களில் ஏறும் பயணிகள் குறிப்பிடத்தக்க சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இந்த ATR விமானங்கள் பிரதான முனைய கட்டிடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் விமான நிலைய பேருந்துகள் மூலம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்த பேருந்தில் பயணிக்கும் நேரம், விமானத்தில் மதுரைக்கு பயணிக்கும் நேரத்தை காட்டிலும் கூடுதலாக எடுக்கிறது. அதோடு, இந்த பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளே இருப்பதால், வயதான பயணிகள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் பேருந்து பயணம் முழுவதும் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பார்க்கிங் கட்டணங்களைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த விமானங்கள் தொலைதூரத்தில் நிறுத்தப்படுகின்றன. இது விமான நிறுவனம் அல்லது விமான நிலைய அதிகாரிகளுக்கு செலவு குறைந்ததாக இருக்கலாம். ஆனால் இதனால் விளைவுகளை சந்திக்கும் பயணிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.
எனவே பேருந்தில் நீண்ட தூரம் பயணிப்பதை தவிர்க்க மதுரைக்கு செல்லும் ஏடிஆர் விமானங்களை பிரதான முனைத்தின் அருகில் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதுமான இருக்கை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற அதிக பயணிகள் தேவை உள்ள வழித்தடங்களில் ஏர்பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.