திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகரில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியைக் கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதியைக் கொடுங்கள். புதிய ரயில் திட்டங்களைக் கொடுங்கள். ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி கொடுங்கள், வரி வருவாயை 50% ஆக கொடுங்கள், நீட்டில் இருந்து விலக்குக் கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டிக் கொடுங்கள், தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டுடைய தொகுதி அளவு குறைக்கக் மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் வாக்குக் கொடுங்கள். கீழடி அறிக்கையைக் கொடுங்கள். இதெல்லாம் தான் நாங்கள் கொடுங்க.. கொடுங்க.. கொடுங்க என்று கேட்கிறோம்.
ஜீரோ சொன்ன ஒன்றிய அரசு
ஆனால் அவங்க நமக்குக் கொடுத்தது என்ன? வெறும் ஜீரோ. அப்போது நாமும் அவர்களுக்கு எலெக்ஷனில் அதையே தான் திரும்பிக் கொடுக்க வேண்டும். பாஜக மட்டுமில்லாமல் ஒட்டு மொத்தமா என்டிஏ கூட்டணியும் 2024 நாடாளுமன்ற தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் ஜீரோவாக வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு ஜீரோ சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பாஜகவின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவர் இப்போது முழுசாக என்டிஏ பழனிசாமியாக மாறியிருக்கிறார். நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான்.. என்று சொல்வது போல் மைக்க்கு முன் வந்து நின்று கொண்டு நான் தான் கூட்டணிக்குத் தலைமை, நான் தான் கூட்டணிக்குத் தலைமை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சொல்ல வில்லை.. புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
ஓனரை மிஞ்சின லேபர்
இந்த நிலையில ஒரு வித்தியாசமான போராட்டத்தை இப்போது அறிவித்து இருக்கிறார். பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலை திட்டத்தை நாம் தடுப்பதற்காகத்தான் போராட்டமாம். அவர் முதலில் அந்தச் சட்டத்தைப் பற்றி எதையாவது படித்தாரா? அந்தச் சட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் அவரின் அறிக்கையில் அதை ஏன் குறிப்பிட வில்லை? 100 நாள் வேலை என்பது உரிமையாக இருந்தபோதே 50 நாள் கூட பாஜக அரசு வேலை தரவில்லை. இப்போது எப்படி 125 கொடுப்பாங்க? இனி மாநில அரசு தான் 40% நிதியைத் தர வேண்டும் என்று வேறு மாற்றி இருக்கிறார்கள். இதெல்லாம் பழனிசாமிக்குத் தெரியுமா? தெரியாதா? என்ன சட்டம் என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றுமே தெரியாமல் இவர் வந்தால் 150 நாளாக உயர்த்துவோம் என்று வேறு அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சின லேபரா இருக்கார் பழனிசாமி. அவர்கள் கூட்டணியில் இருக்கும் டிசைனை பாருங்கள். ஜெயலலிதாவுடைய மரணத்துக்குப் பிறகு முதலில் சசிகலாவை முதலமைச்சராக்க நினைத்தார்கள். அது முடியாம போன காரணத்தால் கூவத்தூரில் வைத்து பழனிசாமியை கொண்டு வந்தார்கள். தனக்கு பதவி கொடுத்தவர்களையே கட்சியிலிருந்து நீக்கினார் பழனிசாமி.
போன எலெக்ஷன் பார்த்தால் எல்லாரும் பிரிந்து பிரிந்து நின்றார்கள். இப்போது அதில் பாதி பேர் பாஜக கூடவே திரும்ப வந்து சேர்ந்து இணைந்து கொண்டார்கள். இவங்க மொத்தத்தில் மக்கள் நலனுக்காக கூட்டணி நடத்தவில்லை. இவங்களுக்குள் ஒரு மியூசிக்கல் சேர் தான் விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
நடக்க உள்ள தேர்தல் தமிழ்நாடு vs என்டிஏ. இதில் நாம் தமிழ்நாட்டை ஜெயிக்க வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தோல்வி என்பது பாஜகவுக்கு புதிது இல்லை. தினமும் காலையில சூரியன் உதிப்பதை போல அவங்கர்களுக்கு ரொட்டீன் அது. ஆனால் இதுவரை அடைந்த தோல்வியை விட மிகப் பெரிய தோல்வியை பாஜகவும், சுயநலத்துக்காகச் சுயமரியாதை விற்று டெல்லிக்குச் சேவைகள் செய்யக்கூடிய அடிமை அதிமுக அடையப்போகிறது.
இதுவரை அடைந்த வெற்றிகளை விட மிகப் பெரிய வெற்றியைத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடையப்போகிறது. வளர்ந்த தமிழ்நாட்டை மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம். அதற்கு இளைஞர்களுடைய உங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்புக்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
என் மூத்த புள்ள இளைஞர் அணி
என்னுடன் இளைஞர் அணியில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தார்கள் என்று நேற்று வெளியிட்ட வீடியோவில் கூட நான் சொல்லி இருக்கிறேன். இது குறித்து ஒரு லிஸ்ட் கூட எடுத்துப் பாத்தேன். இப்போது அமைச்சரவையில் இளைஞர் அணி இருந்தவர்கள் 10 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். 24 பேர் எம்எல்ஏக்களாக இருக்கிறார்க்ள். 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேயராக 3 பேர் இருக்கிறார்கள். இதற்கு முன்னிருந்த கேபினெட்டிலும் இளைஞர் அணியில் இருந்தவர்கள் அமைச்சர்களாகத் தேர்வாகி இருந்தார்கள்.
அப்படி பட்ட நான் மறந்துடுவேனா? என் மூத்த புள்ள இளைஞர் அணி. நீங்க உண்மையாக உழைத்தால் உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் உங்களைத் தேடி வரும். உங்க சீனியர்ஸ் போல் உங்க முன்னோடிகளைப் போல் நீங்களும் உழைக்க வேண்டும். மூத்தோரை மதித்து, இளையோரை அரவணைத்து உடன்பிறப்புக்களிடம் ஒரு தாய் மக்களாக அன்பு செலுத்துங்கள். உங்கள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். உழையுங்கள். அதுவும் உங்கள் தனித்தன்மை எல்லோருக்கும் தெரிவது போல் உழையுங்கள். உங்கள் உழைப்பால கழகத்தை, மாநிலத்தையும் உயர்த்துங்கள். அடுத்து வெற்றி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம். தமிழ்நாடா? என்டிஏ வா? என்ற ஜனநாயக போரில் நாம் வெல்வோம் ஒன்றாக “என்று தெரிவித்தார்.
