தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,”என் உயிரோடு கலந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்தச் சிறப்பான நேரத்தில், உங்களை எல்லாம் நான் சந்தித்து, நம் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன் கூட்டியே கிடைத்துள்ளது.
இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் சேகர் பாபு இருந்தாலும், நமது தொகுதி என்று சொன்னால் அதில் ஒரு ஸ்பெஷல் இருக்கும். ஒரு எழுச்சி இருக்கும். ஒரு சிறப்பு இருக்கும். ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆர்வம் இருக்கும். ஒரு ஆரவாரம் இருக்கும். நம்மையே அறியாமல் நம்முடைய உள்ளத்தில் ஒரு புலங்காகிதம் இருக்கும்.
என்னதான் நான் முதலமைச்சராக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அல்லது பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நேரத்தில் என்ன மகிழ்ச்சி அடைகிறேனோ, பெருமை அடைகிறேனோ, அதைவிட கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியோடுதான் உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
இன்று பொங்கல் விழாவை சிறப்பாக நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீதத்தை முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீதம் பாக்கி உள்ளது. இன்று பல்வேறு கட்சியினர், ஏன் பாஜகவில் இருக்கக்கூடியவர்கள் கூட ‘திமுக காரன் மாதிரி யாரும் வேலை செய்ய முடியாது’ என்று சொல்கிறார்கள்.
67-இல் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அன்று முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது ஒன்றை குறிப்பிட்டார். ‘திமுக காரன் ஒரு சிங்கிள் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது’ என்று வெளிப்படையாகவே சொன்னார்.
அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள் கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள், நமது செயல்வீரர்கள் ஆற்றிய பணிகளைப் பார்க்கும்போது, நான் ஏற்கனவே 200 தொகுதிகளுக்கு குறையாமல் நாம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் நாம் இப்போது ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை எல்லாம் பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உறுதியேற்போம், சபதமேற்போம் என்று தெரிவித்தார்.”
