ADVERTISEMENT

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அதிமுக – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் சென்னை அண்ணா சதுக்கம் நோக்கி அமைதி பேரணியில் பங்கேற்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள கடிதத்தில், தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நம் மக்களுக்கான அரசியல் இயக்கத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கி, 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகத்தை அரியணை ஏற்றியவர்.

ADVERTISEMENT

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி. ‘மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு’ என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் உலகம் வியக்கும் வண்ணம் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தி, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட ஏற்பளிப்பு வழங்கி, தமிழ்நாட்டில் என்றைக்குமே இந்திக்கு இடமில்லை என்கிற வகையில், தமிழ் – ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, தமிழ்நாடு என்று மாநிலத்திற்குப் பெயர்சூட்டி, தமிழ்நாடு அரசின் இலச்சினையில் ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழை இடம்பெறச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புமிக்க ஆட்சி இரண்டாண்டுகள் கூட முழுமையாக நீடிக்கவில்லை. கொடிய புற்றுநோய் காரணமாக இயற்கை நம் அண்ணனைப் பறித்துக்கொண்டது.

ADVERTISEMENT

தவித்து நின்றது தமிழ்நாடு. கலங்கி அழுதனர் கழகத்தினர். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலைகடலெனத் திரண்டனர் தமிழர்கள். அது உலக சாதனை அளவாக கின்னஸ் புத்தகத்தில் பதியக்கூடிய வகையில் அமைந்தது. அண்ணாவை இழந்துவிட்ட கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வேறு கதி ஏது என்று மாநிலமே கலங்கி நின்ற நிலையில்தான், கழகத்தை இதயத்திலும், ஆட்சியைத் தோளிலும் சுமந்தார் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை வழிநடத்தி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.

தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான நமக்கு, ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், முதல் முழக்கமே ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்பதுதான். சொன்னதைச் செய்வோம் என்பதை அரசியல் இலக்கணமாகக் கொண்ட தலைவர் கலைஞர், அதன்படி உழைத்தார், உழைத்தார், 81 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் தன் 95 வயது வரை ஓயாமல் உழைத்தார்.

ADVERTISEMENT

அண்ணா வழி என்பது அன்பு வழி. அறவழி. சுயமரியாதைப் பாதையில் சமூகநீதி எனும் இலக்கை அடைகின்ற வழி. உறுதிமிகுந்த அந்த இலட்சியப் பாதையில், அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காத்திட முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, எதுவும் ஆகாது.. அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் அண்ணாவின் கொள்கைத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர்.

வழிநடத்தியது மட்டுமின்றி, ஆண்டுதோறும் அண்ணா நினைவிடம் நோக்கி அவரது நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் நாள் அமைதிப் பேரணியில் அவரே நடந்தார். அவர் வழியில் நாம் நடந்தோம். 50 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடிநிலைக் காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, மிசா சட்டத்தின்கீழ் கழக முன்னோடியினர் பலருடன், உங்களில் ஒருவனான நானும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை எதிர்கொண்ட தருணத்தில், மன உறுதி குலையாமல் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த நெருக்கடியான நிலையிலும், அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணியை நடத்தினார். ‘அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல்’ என்று முரசொலியில் வெளியிட்டு, கைதான கழகத் தோழர்களின் விவரங்களைப் பத்திரிகைத் தணிக்கையை மீறி, கழகத்தினரும் அவர்தம் குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும்படி செய்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான்.

பேரறிஞர் அண்ணாவிடம் இதயத்தை இரவலாகப் பெற்று, 50 ஆண்டுகாலம் இயக்கத்தைத் திறம்பட நடத்தி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தலைவராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் நம்மைவிட்டுப் பிரிந்தபோது, அவர் விரும்பியபடியே வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுக்குப் பக்கத்திலேயே நிரந்தர ஓய்வெடுக்கத் தொடங்கினார். கழகத்தைத் தலைமையேற்று நடத்திய அந்த இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை உங்களில் ஒருவனான நான், உங்களின் பேராதரவுடன் வழிநடத்தி வருகிறேன்.

கழகத்தை 6-ஆவது முறையாக அரியணை எற்றியதில் உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.

உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகளும்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை.

பேரறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தமிழ்நாட்டில் அரியணையில் ஏற்றியது என்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம். 1967-இல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.

இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க..

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.

மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.

மக்களிடம் செல் என்று பேரறிஞர் அண்ணா சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது, ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.

என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share