சென்னையில் மூலதனம் நூலை எழுதிய மாமேதை கார்ல் மார்க்ஸின் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 6) திறந்து வைத்தார்.
உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸின் பொருளாதாரக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு புதிதாக உருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ரூ.85.50 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் (எழும்பூர் அருங்காட்சியக வளாகம் அருகில்) புதிதாக மார்க்ஸ் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை சிற்பி என்.எஸ்.கார்த்திகேயன் வடிவமைத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கார்ல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
