இந்தியாவில் வாகன உற்பத்தி மையம் என்றால் தமிழ்நாடுதான் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

இந்தியாவில் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடுதான் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 1600 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை இன்று (பிப்ரவரி 9) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,”இந்தியாவுடைய தொழில் முகங்களில் முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐடி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வுப் பொருட்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் தடம் பதித்து மிகப்பெரிய சாதனை படைத்திருக்கக்கூடிய குழுமம் தான் நம் டாடா குழுமம். உலக அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுக் குழுமமாக டாடா நிறுவனம் உள்ளது. ‘டாடா’ என்றால் அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் உள்ளது. டிசிஎஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலக்ட்ரானிக்ஸ் இவை எல்லாம் அந்த உறவுச் சரித்திரத்தின் பொன்னேடுகள். டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் மேல் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் பெருமைமிகு அடையாளங்கள்.

இந்தியாவில் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடுதான். அது மட்டுமா? மின் வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில் தமிழ்நாடு இன்று டாப் பொசிஷனில் இருப்பதற்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளன. அதேபோல டாடா மோட்டார்ஸ் உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின் வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது.

ADVERTISEMENT

பன்னாட்டுத் தரவரிசைகளை கடைபிடித்து, குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மை மிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும் உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இதில் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ முன்வந்துள்ளது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

டாடா ஜேஎல்ஆர் ஆலை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம்.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த மாநிலம் என்பதுதான் அது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் உலகச் சந்தைகளுக்கும் சேர்த்தே தயாரிக்கப்படுவதற்கான பெருமைமிகு அடையாளம்தான் இந்த ஆலை” என்றார்.

ADVERTISEMENT

மேலும், பல தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க முன்வர வேண்டும் என டாடா நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கிறேன். இதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம். 100 திட்டங்களை இதில் செயல்படுத்த உள்ளோம். திட்டங்களைத் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டுவது, சிறப்பாகச் செயல்படுவதை வெளிப்படுத்துவோம்.

தமிழக அரசு கேரண்டி கொடுத்தால் காப்பாற்றும் என உலக முதலீட்டாளர்கள் நம்பி வந்துள்ளனர். தமிழகம் வாகனத் துறையில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறது” எனப் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share