மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி காலை 5.30 நிலவரப்படி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மத்திய, மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடலின் ஆந்திர கடலோர பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி இது நகர வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்பு
மேலும் ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 வரை மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 16 வரை தெற்கு வங்க மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.