மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளா – தேனி இடையிலான சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் முதல் காசர் கோடு வரையான 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டம் மூணாறில் தொடர் மழை காரணமாக கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் (NH) நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூணாறின் அந்தோணியார் நகரைச் சேர்ந்த 58 வயதான கணேசன் என்பவர் சிக்கி உயிரிழந்தார்.
லாரியில் தேவிகுளத்திலிருந்து மூணாறுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரும், கிளீனர் முருகனும், பழைய அரசுக் கல்லூரி அருகே சென்றபோது கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் லாரியுடன் சிக்கினார்.
சம்பவத்திற்குப் பிறகு, அருகில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் விளக்குகள் ஒளிரும் லாரியை கவனித்த போது லாரி மண்சரிவில் சிக்கி இருந்தது தெரியவந்தது. கணேசன் லாரிக்குள் சிக்கியிருந்ததை அறிந்த உடனே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
அவரை மீட்டு மூணாரில் உள்ள டாடா மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூணாரில் இருந்து தேனிக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேவிகுளம் வழியாக நெடுஞ்சாலையின் மூணாறு-போடிமெட்டு பகுதியில் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அதிரிகத்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஜூலை 30ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரல் மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு மழை தீவிரமடைந்திருக்கும் சூழலில் மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.