அருண் டொமினிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேமலு’ புகழ் நஸ்லன், மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா அத்தியாயம் 1: சந்திரா.
ஓணம் ரிலீசாக கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது லோகா.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இயக்குநர் அருண் டொமினிக், கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் நஸ்லென் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது நடிகர் நஸ்லென் பேசுகையில், ”இப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னென்னமோ நடக்குது வாழ்க்கைல. இன்னைக்கு காலைல சூர்யா-ஜோதிகா வீடியோ கால் பண்ணி ‘படம் சூப்பர்’னு வாழ்த்துனாங்க. இதற்கெல்லாம் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என பேசினார்.
தொடர்ந்து கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், “லோகா படத்திற்கு சென்னையில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும்னு நினைத்து கூட பார்க்கல.. நஸ்லென் சொன்னமாறி என்னென்னமோ நடக்குது. உங்கள் ஆதரவு தான் எங்களின் வெற்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளரும், நடிகருமான துல்கர் சல்மான் பேசுகையில், “லோகா படத்தில் நான் நடிக்கல. ஒரு தயாரிப்பாளரா ஒரு கிளாஸ் டீச்சர் மாதிரி இந்த பசங்களயெல்லாம் உங்கள சந்திக்க இங்கே கூட்டி வந்துருக்கேன். தமிழில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு. தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை எப்பவுமே எனக்கு நம்பிக்கை இருக்கு. நேரடி மலையாள படமோ, டப்பிங் படமோ சென்னையில் ஊடகங்களுக்கு தனியாக ஒரு ஷோ நடத்திவிட்டால், அவர்கள் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு போய்ருவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு அதிகமா இருக்கு. அதற்கு மிகப்பெரிய நன்றி. இதை நாங்க யாரும் இப்படி எதிர்பாக்கல. கேரளா நாட்டுப்புறத்தை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்தோம். ஆனால் எல்லா இடத்திலும் இது ஜெயிக்கிறத பாக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கு. இதைமாறி இன்னும் நிறைய படம் பண்ணுவோம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
”