தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பிற்காக நடப்பாண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மதிமுக எம்பி துரை வைகோ-வின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார் கோயில் பகுதியில் அமைந்துள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிவன் கோயில், பீடத்தின் முன்பகுதியில் சக்கரங்களுடன் கூடிய தேர் மண்டபம் ஆகியவை இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகும் என்றார். பழங்கால நினைவு சின்னங்கள், தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 மற்றும் பாதுகாப்பு கொள்கையின் படி, தேவையின் அடிப்படையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
ஆண்டு பராமரிப்பு பாதுகாப்பு திட்டத்தின் படி நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் உட்பட தமிழ்நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கீழ் 412 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் உள்ளன என்றும் அவை வழக்கமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இத்தகைய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார். இது மாநிலத்தில் உள்ள பாரம்பரிய இடங்கள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதாக கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
குன்றாண்டார் கோவில் சிறப்பு என்ன?
திருக்குன்றக்குடி என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிற இடம் தான் குண்றாண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் குன்றாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு கி.பி.775 ஆண்டில் நந்திவா்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் (சிவன்கோயில்) இங்கு அமைந்துள்ளது. மலையின் மேல் சிறிய முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபம் தோ் போன்ற அமைப்பில் குதிரைகள் பூட்டிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது (மூலம்: https://pudukkottai.nic.in)