திருப்புவனம் போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமார் (Lockup Death Ajith Kumar) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜூலை 30-ந் தேதி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மடப்புரம் கோவிலில் நகை காணாமல் போனது தொடர்பாக காவலாளி அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின் போது போலீசார் கடுமையாகத் தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஜித்குமார் மரணத்துக்கு காரணமான போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அஜித்குமார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அஜித்குமாரின் தாயார், தம்பி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார் மரணத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் அஜித்குமார் உயிர் பறிபோய்விட்டது. அதிமுக தலையிட்டதால்தான் தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது என்றார்.