விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்பு பெற்ற கோயில் ஆகும்.
ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெறும்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கடந்த ஜூலை 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையிலான அதிகாரிகள் தேரோட்டத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்துவதற்கு ஆலோசனை செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விருதுநகர் பொதுமக்கள் தேரோட்டத்தை கொண்டாடுவதற்காக ஜூலை 28ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் சுகபுத்ரா
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அன்று ஒரு நாள் மட்டும் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 9 வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 28 திங்கள் கிழமை வருகிறது. சனி, ஞாயிறோடு சேர்ந்து மூன்று நாள் விடுமுறை வருவதால் விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
Local holiday for Virudhunagar district