மாமன்னர் இராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் மாமன்னர் இராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்) ஆகியவற்றுக்கு வரும் நவம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடுசெய்யும் வகையில், வேறொரு நாளில் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1040ஆவது சதய விழா வரும் அக்டோபர் 31ம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் நவம்பர் 1ஆம் தேதி சனிக் கிழமை என இரண்டு நாட்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
