தமிழ் திரையுலகில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற ‘மீடியம் பட்ஜெட்’டுக்கும் குறைவான படங்கள் அசத்தியது போன்று தெலுங்கில் இந்த ஆண்டு பலரைப் புருவம் உயர்த்த வைத்தது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’. சாய் மார்த்தாண்ட் இயக்கிய இந்தப் படம் சுமார் இரண்டரை கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.
ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த அனுபவத்தைக் கொண்ட ஷிவானி நகரம், கல்லூரி கால கலாட்டக்களை சொல்கிற தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்திருந்த மௌலி தனுஜ் பிரசாந்த் ஆகியோரின் நடிப்புத் திறமையை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’.
ராஜிவ் கனகலா, சத்யா கிருஷ்ணன், நிகில் அப்பூரி உட்படப் பலர் இதில் நடித்திருந்தனர். சிஞ்சித் யெர்ரமல்லியின் பாடல்கள் ஜென்ஸீ தலைமுறையை ஆட்டுவித்தது.
தியேட்டரில் வெளியானபோதே இப்படம் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துச் சாதனை படைத்தது. தற்போது ‘இடிவி வின்’ தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.
ஓடிடியில் வெளியான நான்கு நாட்களில் மட்டும் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ படம் பத்து கோடி முறை பார்க்கப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் செலவை விட ஓரிரு கோடிகள் அதிகமாக வசூலிக்கிற சூழலில், ஒரு சின்ன பட்ஜெட் படத்தின் பிரமாண்ட வெற்றி கவனம் பெற்றிருக்கிறது. இளைய தலைமுறை கலைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு வழியமைத்து தந்துள்ளது.