“பையன் ஸ்கூல்ல ஹோம் வொர்க் பண்ணலனா, இவங்களே எழுதித் தர்றது…”, “விளையாடும்போது கீழே விழுந்துடுவாளோனு கூடவே சுத்துறது…” – இப்படிப் பார்த்துப் பார்த்து வளர்ப்பது பாசம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான இந்த அக்கறை, குழந்தைகளின் எதிர்காலத்தையே முடக்கிவிடும் என்று உங்களுக்குத் தெரியுமா?
இத்தனை நாட்களாகப் பிரபலமாக இருந்த ‘ஹெலிகாப்டர்’ மற்றும் ‘ஸ்னோ ப்ளோ’ (Snowplow) வளர்ப்பு முறைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, இப்போது உலகம் ‘லைட் ஹவுஸ்’ (Lighthouse Parenting) முறைக்கு மாறி வருகிறது.
பழைய முறைகளில் என்ன சிக்கல்?
- ஹெலிகாப்டர் பெற்றோர் (Helicopter Parenting): எப்போதும் குழந்தையைச் சுற்றியே வட்டமிடுவது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் கண்காணித்து, திருத்திக்கொண்டே இருப்பது. இதனால் குழந்தைக்குத் தன்னம்பிக்கை குறையும்.
- ஸ்னோ ப்ளோ பெற்றோர் (Snowplow Parenting): பனியை அகற்றும் இயந்திரம் போல, குழந்தையின் பாதையில் வரும் தடைகளை எல்லாம் பெற்றோரே முன்கூட்டியே நீக்கிவிடுவது. இதனால் தோல்விகளைச் சந்திக்கும் பக்குவம் குழந்தைக்கு வராமல் போய்விடும்.
அது என்ன ‘லைட் ஹவுஸ்‘ முறை? கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கத்தை (Lighthouse) கவனித்திருக்கிறீர்களா? அது கப்பலுக்கு வழி காட்டுமே தவிர, கப்பலை ஓட்டாது. கப்பல் பாறையில் மோதாமல் இருக்க வெளிச்சம் பாய்ச்சும்; ஆனால், அலைகளோடு போராடிக் கப்பலைச் செலுத்துவது மாலுமியின் (குழந்தையின்) பொறுப்பு.
இந்த முறையின் அடிப்படை இதுதான்: “நான் இங்கே இருக்கிறேன், உனக்குப் பாதுகாப்புத் தருவேன். ஆனால், உன் வாழ்க்கைப் படகை நீதான் ஓட்ட வேண்டும்.”
லைட் ஹவுஸ் பெற்றோராக மாறுவது எப்படி?
- தூரத்தில் இருந்து கவனியுங்கள்: குழந்தை ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், உடனே ஓடிச் சென்று உதவாதீர்கள். அவர்களே அதைச் சமாளிக்கிறார்களா என்று பொறுமையாகப் பாருங்கள். தடுமாறும் போது மட்டும் கைகொடுங்கள்.
- வழிகாட்டுங்கள், கட்டுப்படுத்தாதீர்கள்: “இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று உத்தரவு போடாமல், “இப்படிச் செய்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களுக்குப் புரியவையுங்கள்.
- தோல்வியை அனுமதிக்கவும்: பரீட்சையில் மார்க் குறைந்தாலோ, போட்டியில் தோற்றாலோ அதுவும் ஒரு பாடம் தான். அந்தத் தோல்வியில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்.
நன்மைகள்: இந்த முறையில் வளரும் குழந்தைகள் அதிக மன உறுதியுடனும் (Resilience), பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனுடனும் (Problem-solving skills) வளர்வார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்திருக்க மாட்டார்கள்; உங்களை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பார்ப்பார்கள்.
உங்கள் குழந்தை கடலில் நீந்தும்போது, கூடவே நீந்திக் கொண்டிருக்காதீர்கள். கரையில் நம்பிக்கையான கலங்கரை விளக்கமாக நில்லுங்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானது!
