அரசாங்கங்கள் குடிமக்களைச் செயலற்ற பயனாளிகளாக அல்லாமல், பங்கேற்பாளர்களாகக் கருதும்போது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்.
ஃப்ரெடி தாமஸ்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நவம்பர் 1 அன்று, தனது மாநிலம் தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அறிவித்தபோது அது வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. வறுமை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் புள்ளிவிவர விவாதங்களைச் சுற்றியே நடக்கும் ஒரு நாட்டில் இந்த அறிவிப்பு, அனைவரையும் உள்ளடக்குவது என்றால் என்ன என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க அழைக்கிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில் நடந்த பெரும்பாலான தேசிய உரையாடல்கள், அத்தகைய கூற்றை அனுபவ ரீதியாகச் சரிபார்க்க முடியுமா என்பதில் கவனம் செலுத்தின. அவை சரியான கேள்விகள்தான். ஆனால் இவற்றுக்கான பதில்களை உடனடியாகக் கண்டறிய முடியாது. அறிவியல் முறைகள், துல்லியமான தரவு, கவனமான மதிப்பீடு ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையான கல்விப்புலம் சார்ந்த ஆய்வு தேவை.
இருப்பினும், கேரளத்தின் முயற்சி, மக்களைப் பங்கேற்கவைக்கும் வடிவமைப்பு, நீண்டகால நோக்கு, சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு அது தரும் கண்ணிய உணர்வு ஆகியவற்றிற்காகக் குறிப்பிடத் தகுந்தது.
பங்கேற்புப் பாதை
2021இல் தொடங்கப்பட்ட மாநிலத்தின் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம், மேலிருந்து கீழே அமலாக்கப்படும் நலத்திட்டமாகக் கருதப்படவில்லை, மாறாகப் பங்கேற்பு இயக்கமாகக் கருதப்பட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை உள்ளூர் மட்டத்தில் தொடங்கியது. இதில் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், 1998இல் தொடங்கப்பட்ட குடும்பஸ்ரீ வறுமை ஒழிப்புத் திட்டத்தின் பணியாளர்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
உணவு, உடல்நலம், வீட்டுவசதி, வருமானம் ஆகிய நான்கு முக்கியப் பரிமாணங்களில் குடும்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஒவ்வொன்றிற்கும் நுண்ணிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த முயற்சியின் மூலம், 64,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களும் மிகவும் ஏழைகளாக அடையாளம் காணப்பட்டனர். அடிப்படை ஆவணங்களான ரேஷன் அட்டைகள், ஆதார் ஆகியவற்றை அவை இல்லாதவர்களுக்கு அரசு வழங்கியது. குடும்பஸ்ரீ வலைப்பின்னல்கள் மூலம் வழக்கமான உணவு விநியோகத்தை உறுதிசெய்தது. சுகாதார வசதியை நீட்டித்தது. LIFE (Livelihood Inclusion Financial Empowerment – வாழ்வாதார உள்ளடக்கமும் நிதி அதிகாரமும்) திட்டத்தின் கீழ் வீட்டுவசதியை வழங்கியது.
வாழ்வாதார உதவி சுய உதவிக் குழுக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி ஆதரவு, உதவித்தொகைகள் ஆகியவற்றுடன், தேவைப்பட்டால் பாதுகாப்பான வீட்டுவசதி ஆகியவை கிடைத்தன.
நலன், வாழ்வாதாரம், மனித மேம்பாடு ஆகியவற்றை ஒன்றிணைத்தது கேரளத்தின் தனித்துவமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. சமூக ஆதரவை அதிகாரமளித்தலுடன் ஒருங்கிணைத்தல் என்பதே அந்த அணுகுமுறை.
நீண்ட மரபு
கேரளத்தின் இன்றைய வெற்றி தற்செயலானது அல்ல. இது பல தசாப்தங்களாக அங்கே நடைபெற்றுவரும் நிலையான சமூக முதலீடு, சீர்திருத்தம் ஆகியவற்றின் விளைவாகும். 1957இலேயே, நிலச் சீர்திருத்தச் சட்டங்களைச் செயல்படுத்திய முதல் மாநிலம் இது. உரிமையை மறுபகிர்வு செய்து நிலப்பிரபுத்துவ ஏற்றத்தாழ்வுகளை அகற்றியது. பின்னர் இது இந்தியாவின் முழுமையாகக் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மாறியது. பொது அமைப்புகளுடன் உரையாடவும் அவற்றிடம் கேள்வி எழுப்பவும் திறனுள்ள குடிமக்களை உருவாக்கியது.
அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த அடித்தளத்தின் மீது கட்டமைத்தன. நலத் தொகைகள் அதிகரிக்கப்பட்டன, அங்கீகரிக்கப்பட்ட சமூகச் சுகாதாரப் பணியாளர் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது, அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் மேம்படுத்தப்பட்டது போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் பரந்த சமூக-ஜனநாயக நெறிமுறையை அடியொற்றியதாக அமைந்துள்ளன. இவை தற்காலிக இலவசங்கள் அல்ல; மாறாகக் கண்ணியத்தையும் சமூகப் பாதுகாப்பையும் நிலைநிறுத்தும் நடவடிக்கைகள்.
கேரளத்திற்கும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் வியக்கத்தக்க அளவில் உள்ளன. சமீபத்திய தேசிய குடும்பச் சுகாதார ஆய்வின்படி, கேரளாவின் குழந்தை மரண விகிதம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 4.4 ஆக உள்ளது, இது தேசிய சராசரியின் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். பொதுச் சுகாதார மையங்களில் மருத்துவர் காலியிட விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது. தனியார் சுகாதார வழங்குநர்களின் பங்கு நாட்டின் மிகக் குறைவாக, 47.4% ஆக உள்ளது.
கேரளம் பெரும்பாலான மாநிலங்களைவிடச் சுகாதாரத்திற்காக அதிகமாகச் செலவிடுகிறது. நோயாளிக்கு மிகக் குறைந்த செலவுகளில் சிறந்த சேவைகளை வழங்குகிறது.
கேரளத்தில் வாழும் ஒருவர் நல வாழ்வு வாழ்வதாக உணர்கிறார். குறிப்பாகச் சமூக ஆதரவு, சுகாதாரம், கல்வி போன்ற அம்சங்களில். போதுமான வேலைகளை உருவாக்குவதில் சவால்கள் உள்ளன என்றாலும், கேரளத் தொழிலாளர்கள் பிற இடங்களில் வேலை செய்வது, வேலைவாய்ப்புத் திறன், தகவமைவுத் திறன் ஆகியவை வலுவான கல்வி, சமூகச் சூழல் அமைப்பின் விளைவுகளாகும்.
எனவே, மாநிலத்தின் வளர்ச்சி அதன் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. அதன் மக்கள் உலகளாவிய அளவில் இயங்கக்கூடியவர்களாக உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புதல், திறன்களைப் பகிர்ந்துகொள்ளுதல், பன்முகக் கலாச்சாரம் ஆகிய பலன்களை இது அளிக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு எரிபொருளாக அமைகிறது. இடப்பெயர்வின் மூலம் கிடைக்கும் இந்தச் சாதகங்கள் கேரளத்தின் வளர்ச்சி மாதிரி ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பாதுகாப்பு அமைப்புகள்

கேரளாவின் நலன்சார் கட்டமைப்பு, பாரம்பரியப் பாதுகாப்பு வலைகளுக்கு அப்பால் வளர்ந்துள்ளது. இது இப்போது சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் ஒருமுறை கூறியதுபோல் பாதுகாப்புக்கான அமைப்புகளை உருவாக்க விரும்புகிறது. இது தனிநபர்களும் குடும்பங்களும் துயரத்திலிருந்து மீண்டு வர உதவும் வழிமுறைகளை உருவாக்குவதும், மக்கள் எதையேனும் சார்ந்திருப்பதைத் தவிப்பதற்குமான அமைப்புகள் இவை.
தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் இந்த அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது காலவரையற்ற உதவிகளைக் கொண்டது அல்ல. ஏழைகளுக்கு உடல்நலம், அடிப்படை ஆவணங்கள், திறன்கள், வேலைவாய்ப்புக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் திட்டங்க்ளைக் கொண்டது. சொந்த முயற்சியுடனும் கண்ணியத்துடனும் வறுமையிலிருந்து வெளியேறத் தேவையான கருவிகள் இவை.
இது அமர்த்தியா சென்னின் வளர்ச்சியைக் குறித்த திறன் அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. இது வருமானத்திலிருந்து சுதந்திரத்திற்கு கவனத்தை மாற்றுகிறது. அதாவது, ஒருவர் ஆரோக்கியமாக, கல்வி அறிவுள்ளவராக, உற்பத்தித் திறன் கொண்டவராக இருப்பதற்கான சுதந்திரம். கேரளத்தின் கொள்கைகள் நீண்ட காலமாக இந்தக் கண்ணோட்டத்தைப் பிரதிபலித்துவருகின்றன. மக்களின் உண்மையான தேர்வுகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகின்றன.
மைய நீரோட்டப் பொருளாதாரத்தில், சமத்துவத்திற்கும் செயல்திறனுக்கும் இடையே சமரசம் இருப்பதாகக் கருதப்படுகிறது. வளங்களின் மறுபகிர்வு வளர்ச்சியை மெதுவாக்கும் என்று சொல்லப்படுகிறது. கேரள அனுபவம் இந்தக் கருத்துக்குச் சவால் விடுகிறது.
வறுமை என்பது வெறும் வருமானமின்மை மட்டுமல்ல, மாறாக நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கல்வியின்மை என ஒன்றையொன்று வலுப்படுத்தும் பல குறைபாடுகள் இணைந்த ஒரு பொறி. குறிப்பான இலக்குக் கொண்ட நலத்திட்டங்களின் வாயிலாக இந்தச் சுழற்சிகளை உடைப்பதன் மூலம் மக்களை அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக, வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக, நெருக்கடியிலிருந்து மீளும் திறன் கொண்டவர்களாக மாற்றியுள்ளது. இங்கே வளங்களின் மறுபகிர்வு வளர்ச்சியின் உந்துசக்தியாக இருந்துள்ளது; தடையாக அல்ல.
நன்றாக வடிவமைக்கப்பட்ட நலத்திட்டங்களை உற்பத்தித்திறன் வாய்ந்த முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். இது மனித மூலதனத்தை உருவாக்குகிறது. தொழிலாளர் படையின் திறன்களைக் கூட்டுகிறது, நவீன பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.
தேசத்திற்கான பாடங்கள்

கேரளத்தின் சாதனை இந்தியாவிற்கு விலைமதிப்பற்ற பாடங்களை வழங்குகிறது. உணவுக்கான உரிமைச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்வதற்கான தார்மீக, சட்டப்பூர்வக் கடமையை அங்கீகரித்தது. அத்தகைய உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கேரளம் காட்டுகிறது: பரவலாக்கப்பட்ட ஆளுகை, தரவு அடிப்படையிலான திட்டமிடல், சமூகப் பங்கேற்பு.
மற்ற இடங்களில் இதை நகலெடுப்பது எளிதானதல்ல. நிர்வாக ஆழம், அரசியல் விருப்பம், சமூக நம்பிக்கை ஆகியவை தேவை. ஆனால் இதில் பெரிய பாடம் இருக்கிறது. அரசாங்கங்கள் குடிமக்களைச் செயலற்ற பயனாளிகளாக அல்லாமல், பங்கேற்பாளர்களாகக் கருதும்போது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும் என்பதே அந்தப் பாடம்.
தீவிர வறுமையை ஒழிப்பதாக அறிவிப்பது இறுதிப் புள்ளி அல்ல. முக்கியமான மைல்கல். வறுமையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் அதற்குள் சென்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதுதான் முக்கியம். வேலை, கல்வி, கண்ணியத்திற்கான வாய்ப்புகளை நிலைநிறுத்துவதன் மூலமே அதைச் செய்ய முடியும். இத்தகைய மாற்றத்தில் யாருமே விடுபட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
கேரளம் மாதிரி, முன்னேற்றம் என்பது வெறும் வருமானத்தைப் பற்றியதல்ல, மாறாக மானுட கண்ணியத்தை விரிவுபடுத்துவது பற்றியது என்பதைக் காட்டியுள்ளது. ஒன்றியக் கட்டமைப்பின் வரம்புகளுக்குள்ளும், வளர்ச்சி என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்வதில் ஒரு மாநிலம் வழிநடத்த முடியும் என்பதைக் கேரளம் செய்துகாட்டியுள்ளது.
ஃப்ரெடி தாமஸ், பெங்களூரில் உள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் சட்டத்தின் பொருளாதாரப் பகுப்பாய்வைக் கற்பிக்கிறார். சட்டம், பொருளாதாரம், பொதுக் கொள்கை ஆகியவற்றிடையே உள்ள தொடர்புகள் பற்றி எழுதிவருகிறார்.
நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்
